தமிழகம்

திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி தற்கொலை: பணிக்கு வந்த 7 மாதத்தில் பரிதாபம்

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா, அவரது குடியிருப்பில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் கடிதம் எழுதி வைத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ரவி. ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர். இவரது இரண்டாவது மகள் ஆர். விஷ்ணுபிரியா (27). சென்னை தலைமை செயலகத்தில் வருவாய்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 தேர்வு எழுதிய விஷ்ணுபிரியா அதில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வா னர். சிவகங்கையில் பயிற்சி முடித்த பின் நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டில் முதன்முதலில் டிஎஸ்பியாக பணி நியமனம் செய்யப்பட்டார்.

நேற்று திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தின்போது, அங்கு சென்ற டிஎஸ்பி விஷ்ணுபிரியா, அவர்களை சமாதானப்படுத்தினார். சம்பவ இடத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக அவர் பணியில் இருந்துள்ளார்.

இதையடுத்து காவலர் குடியிருப் பில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற அவர் அங்கு ஓய்வு எடுத்துள் ளார். அவருக்கு உதவியாக உள்ள பணிப்பெண், மாலையில் காபி தருவதற் காக கதவை தட்டியபோது கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து ஜன்னலைத் திறந்து பார்த்தபோது, விஷ்ணுபிரியா தனது துப்பாட்டா மூலம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அவர் அளித்த தகவலின் பேரில் நாமக்கல் எஸ்பி எஸ்.ஆர்.செந்தில் குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரி கள் அங்கு சென்று விஷ்ணு பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விஷ்ணு பிரியா கடிதம் எழுதி வைத்துள்ளார் என்று தெரிவித்த காவல்துறையினர் அது குறித்த விவரத்தை உடனடியாக வெளியிடவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் திருச்செங் கோடு டிஎஸ்பியாக பதவியேற்ற விஷ்ணு பிரியா, பொதுமக்களை பாதிக்கும் பல் வேறு பிரச்சினைகளை தீர்க்க நேரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். பரபரப்பை ஏற்படுத்திய தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாகவும் விஷ்ணு பிரியா செயல்பட்டுள்ளார்.

திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே நேற்று ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தின் போது, அவர்களை சமாதானப்படுத்தும் பணியில் ஈடுபட்டி ருந்த டிஎஸ்பி, சகஜமான மனநிலையில் இருந்ததாக அங்கு பணியில் இருந்த காவலர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவருக்கு மன உளைச் சலை ஏற்படுத்திய ஏதோ ஒரு தகவல் அல்லது மிரட்டல் காரணமாக தற்கொலை முடிவுக்கு அவர் சென்றி ருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT