ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரைக்கும், அத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான திமுகவைச் சேர்ந்த அப்பாவுவுக்கும் இடையில் நடந்துவரும் அரிசி அரசியல் கரோனா களேபரத்தைத் தாண்டிவிட்டது.
திமுகவினருக்கு நிகராக ஆளும் கட்சியினரும் ஆங்காங்கே கரோனா நிவாரண உதவிகளை வழங்கி வரும் நிலையில், ‘ஏழைகளுக்கு விநியோகிக்க மத்திய அரசு வழங்கிய ரேஷன் அரிசியை, அதிமுகவினர் கடத்தி பாலிஷ் செய்து கள்ளச்சந்தையில் விற்பதாகவும், அதன் மூலமே ராதாபுரம் எம்எல்ஏவான இன்பதுரை பொதுமக்களுக்கு அரிசிப் பைகளை நிவாரணமாக வழங்குவதாகவும்’ திடீர் குற்றச்சாட்டைக் கிளப்பினார் ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவான அப்பாவு. இதற்கு பதிலடி கொடுத்த இன்பதுரை, ‘அப்பாவு தன் தவறுகளைத் திசைதிருப்பப் பார்க்கிறார்’ எனக் காணொலி வெளியிட, பரபரப்பு பற்றிக்கொண்டது. தற்போது இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வீசிக் கொண்டிருக்கிறார்கள்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போதே இருவருக்கும் இடையிலான அரசியல் பகை வேர் விட்டது. ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கடைசியில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வாகைசூடினார். இதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார் அப்பாவு. இரு தரப்புக்கும் இடையே நீறுபூத்த நெருப்பாக இருந்துவந்த மோதல், தற்போது அரிசி விவகாரத்தில் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.
இதுகுறித்து அப்பாவு உடன் பேசியபோது, “கரோனா தொற்றுப் பரவலால் மக்களுக்கு ஏற்பட்ட ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ வீதம் கடந்த மூன்று மாதங்களாக 1,78,000 மெட்ரிக் டன் அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. ஆனால் அதிமுக அரசோ, வழக்கமாக வழங்கும் அரிசியை மட்டும் வழங்கிவிட்டு மத்திய அரசு இலவசமாகக் கொடுத்த அரிசியில் பெரும்பகுதியைக் கள்ளச் சந்தையில் விற்கிறது. தமிழகத்தில் இதன் மூலம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 1,200 கோடி ரூபாய்க்குக் கொள்ளை நடந்துள்ளது.
எங்கள் பகுதியை எடுத்துக்கொண்டால் வள்ளியூரில் உள்ள வேளாண்மை விற்பனை கூட்டுறவுச் சங்கத்துக்கு உட்பட்ட மூன்று தாலுகாக்களில் 161 முழுநேர ரேஷன் கடைகளும், 122 பகுதிநேர ரேஷன் கடைகளும் உள்ளன. இங்கு மத்திய அரசு ஒவ்வொருவருக்கும் வழங்குவதற்காகக் கொடுத்த 5 கிலோ இலவச அரிசியில் பெரும்பகுதியை வழங்காமல் கிட்டங்கியிலிருந்து 500 டன்னுக்கு மேல் அரிசியைக் கடத்தி தூத்துக்குடி மாவட்ட அரவை மில்லில் பாலீஷ் செய்து 5 கிலோ பைகளாக விற்றிருக்கிறார்கள். இன்பதுரை தனது சொந்தப் பணத்தில் மக்களுக்கு அரிசி வழங்குவதாகச் சொல்லி இந்த அரிசிப் பைகளை நிவாரணமாக விநியோகித்து மக்களை ஏமாற்றியிருக்கிறார்.
அரிசிக் கடத்தல் பின்னணியில் இன்பதுரையும், கூட்டுறவு சங்கத் தலைவரும் அதிமுக நிர்வாகியுமான முருகேசனும் இருக்கிறார்கள். உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும், பறக்கும் படை தாசில்தாரும் சேர்ந்து இதுவரை 7 பேரைக் கைது செய்துள்ளனர். ஆனால், டிரைவர், அரிசி ஆலை உரிமையாளர் என்ற அளவிலேயே கைது நடவடிக்கை உள்ளது. இந்த முறைகேட்டின் ஊற்றுக்கண்ணான இன்பதுரை, முருகேசன் மீது நடவடிக்கை இல்லை. இதையெல்லாம் சுட்டிக்காட்டி நெல்லை ஆட்சியருக்குப் புகார் மனு கொடுத்துள்ளேன்.
மத்திய அரசு கொடுத்த அரிசியை அதிமுகவினர் வழங்காததை பாஜக ஏன் கண்டிக்கவில்லை? இந்தக் கொள்ளையில் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கிறேன். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றம் வழியாக சிபிஐ விசாரணையும் கோர உள்ளேன்” என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து எம்எல்ஏஇன்பதுரை நம்மிடம் பேசுகையில், “அரிசிக் கடத்தல் கும்பலைக் கைது செய்திருப்பதே அதிமுக அரசுதானே? ஒரு எம்எல்ஏ தவறு செய்திருந்தால் இந்த நடவடிக்கை சாத்தியமா?” என்று ஆரம்பித்தவர், பதிலுக்கு அப்பாவு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
“கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சுயம்புலிங்கம் காங்கிரஸ்காரர். 2010-ல், திமுக ஆட்சியின்போதே அவர் மீது அரிசிக் கடத்தல் வழக்கு உள்ளது. அதன் குற்ற எண் 272/10 இப்போதும் நிலுவையில் இருக்கிறது. சுயம்புலிங்கத்தோடு அப்பாவுவுக்கு நெருக்கம் அதிகம். எங்கே தனது பழைய நட்பு வெளிச்சத்துக்கு வந்துவிடுமோ என முந்திக்கொண்டு இப்படி பொய்ப் பிரச்சாரம் செய்கிறார் அப்பாவு. கூடவே இன்னும் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
லெப்பை குடியிருப்புப் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஒரு காம்பவுண்ட் சுவரைக் கட்டியிருக்கிறார் அப்பாவு. அதற்கு எதிராக உள்ளூர் மக்களே புகார் கொடுத்திருந்தனர். இதுதொடர்பான வழக்கு, மதுரை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் காம்பவுண்ட் சுவரை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தன்னிடம் தெரிவிக்காமல் இடிக்கக் கூடாது என்று அப்பாவு மனு போட்டார். அதற்கு நீதிமன்றம் சம்மதித்தது.
கடந்த பிப்ரவரியிலேயே நடந்திருக்க வேண்டிய காம்பவுண்ட் இடிக்கும் பணி கரோனாவால் தள்ளிப்போனது. இந்நிலையில், கடந்த வாரம் அந்தச் சுவரை இடிப்பது குறித்த அறிவிப்பாணை அப்பாவு குடும்பத்திடம் கொடுக்கப்பட்டுவிட்டது. அதை மக்கள் மத்தியில் மறைக்க நினைக்கிறார். இதேபோல் அப்பாவுவின் பேரன் ஆக்கிரமித்துக் கட்டிய வீட்டை இடிக்கவும் அறிவிப்பாணை வந்துள்ளது.
தொடர்ந்து இப்படித் தவறுகளைச் செய்பவர் அதைத் திசைதிருப்ப என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். தொகுதி மக்களை விட்டு நகர்ந்து, சென்னையிலேயே அவர் செட்டிலாகிவிட்டார். டிவி நிகழ்ச்சிகளில் பார்த்துதான் அவர் இருப்பதையே தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. என் தொகுதிக்குட்பட்ட 95 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி வழங்கியுள்ளேன். அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் அப்பாவு இப்படி புகாரைக் கிளப்பியுள்ளார். எங்களைப் பொறுத்தவரை அவர் ஒரு காலாவதியான அரசியல்வாதி. மற்றபடி அரிசி கடத்தல் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.