கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்ட நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகன நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
280 சோதனைச் சாவடிகள்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களின் நடமாட்டத்தைக் குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. கட்டுப்பாட்டு பகுதிகளில் சிசிடிவி கேமரா மற்றும் ட்ரோன் மூலம் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
சென்னையில் 280-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன. செங்கல்பட்டு- பரனூர், திருவள்ளூர்- திருமழிசை,எளாவூர், நல்லூர், ஆர்.கே.பேட்டைபகுதிகளில் காவல் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இ-பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஆணையர் எச்சரிக்கை
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை பொறுத்தவரை, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேவையின்றி வெளியில் வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரித்திருந்ததால், வாகன நடமாட்டம் நேற்று பெருமளவு குறைந்திருந்தது. இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அண்ணாசாலை, காமராஜர் சாலைகளில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோரை தவிர மற்றவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டன. சாலைகள் பல இடங்களில் மூடப்பட்டன. வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளிலும் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மளிகை கடைகள், மருந்து கடைகள், குறைந்த அளவில் பல்பொருள் அங்காடிகள், அரிசிக் கடைகள், காய்கறி கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. அதே நேரம் நகர் முழுவதும் காய்கறி கடைகளில் தக்காளி கிலோ ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.45, பீன்ஸ் ரூ.80 என விலை உயர்ந்திருந்தது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் இருந்த ஊரடங்கின்போது மாநகராட்சி மற்றும் கோயம்பேடு சந்தை நிர்வாகம் சார்பில் நடமாடும் காய்கறிமற்றும் மளிகை கடைகள் இயக்கப்பட்டன.
ஆனால் நேற்று இதுபோன்ற கடைகள் இல்லாததால், பொதுமக்களுக்கு போதுமான காய்கறிகள் கிடைக்கவில்லை. சென்னை உள்ளிட்ட முழு முடக்க பகுதிகளில் ஆடு, கோழி, மீன் ஆகியவை விற்பதற்கும் 12 நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அக்கடைகள் மூடப்பட்டிருந்தன.
அம்மா உணவகங்களில் கூட்டம்
முழு முடக்கம் அறிவிக்கப்பட்டசென்னை உள்ளிட்ட பகுதிகளில் அம்மா உணவகங்கள், சமுதாயசமையல் கூடங்களின் மூலம்வரும் 30-ம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்றுமுதல்வர் அறிவித்திருந்தார். இதன்படி நேற்று காலை முதல் அம்மா உணவகங்களில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
பால், குடிநீர் விநியோகத்துக்கு தடைவிதிக்கப்படாததால், இப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படவில்லை. அதேநேரம், நாளை (ஞாயிற்றுக்கிழமை) பால்,குடிநீர், மருத்துவம் தவிர மற்றகடைகள் இயங்க முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றுஊரடங்கின் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளன. எனவே,பொதுமக்கள் மளிகை, காய்கறிகளை இன்று வாங்கி வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இடங்களில் நியாயவிலைக்கடைகளின் விற்பனையாளர்கள் தங்கள் பகுதிகளில் வீடுவீடாக சென்று, அரசு அறிவித்த அரிசி குடும்ப அட்டைக்கான ரூ.1,000 நிவாரணத்தை வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.