கோவை மாவட்டத்தில், கோவிட்-19 சிறப்பு கடனுதவியாக 8,284 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.554 கோடி வழங்கப்பட்டுள்ளது என, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கோவிட்-19 சிறப்பு கடனுதவி வழங்குவது தொடர்பாக வங்கியாளர்கள், தொழில் நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், இன்று (ஜூன் 19) மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத், மாவட்டத் தொழில்மையப் பொது மேலாளர் கார்த்திகைவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
"கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ.525 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட முன்னோடி வங்கி மூலம் கோவிட்-19 சிறப்பு கடனுதவியாக 8,284 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.554 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, மாவட்டத் தொழில் மையம் மூலம் கடந்த ஆண்டு 397 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.12 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்முனைவோரின் சிரமங்கள், பிரச்சினைகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவற்றைத் தீர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தொழில் துறையினரின் கோரிக்கைகள் மத்திய நிதியமைச்சகத்துக்கும் தெரிவிக்கப்படும்".
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.