தமிழகம்

கரோனா நோய்க்கு சிகிச்சை நாட்கள் குறைக்கப்பட்டதா?- அரசு மருத்துவமனைகளில் டிஸ்சார்ஜ் அதிகரிப்பால் சர்ச்சை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

அரசு மருத்துவமனைகளில் சமீப வாரங்களாக கரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் சதவீதம் அதிகரித்துள்ளது. அறிகுறியில்லாத நோயாளிகளுக்கு சிகிச்சை நாட்கள் குறைக்கப்பட்டு அவர்கள் உடனுக்குடன் வீட்டிற்கு அனுப்பப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று வரை 52,334 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 28,641 பேர் குணமடைந்து வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 495 நோயாளிகளில் 330 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் இறந்துள்ளனர். சமீப வாரமாக தமிழகத்தில் எந்த aளவுக்கு தொற்று கண்டறியப்படுகிறதோ அதுபோல் அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் சதவீதமும் அதிகரித்துள்ளது.

உதாரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 20 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 10 பேரும், 16-ம் தேதி 10 பேரும், 15-ம் தேதி 19 பேரும், 13-ம் தேதி 8 பேரும், 12-ம் தேதி 21 பேரும், 11-ம் தேதி 13 பேரும், 10-ம் தேதி 12 பேரும், 7-ம் தேதி 7 பேரும், 6-ம் தேதி 16 பேரும் குணமடைந்து வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

முன்பு ஒரு கரோனா நோயாளிளுக்கு 14 நாட்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்குள் அவருக்குச் சிகிச்சைக்கு இடையே மூன்று முறை பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்று நிரூபிக்கப்பட்ட பிறகே அவர் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். தற்போது இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்காமல் அறிகுறி, தொந்தரவு இல்லாமல் தொற்று கண்டறியப்படும் நோயாளிகள் சில நாட்களிலே டிஸ்சார்ஜ் செய்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுரை வழங்கி அனுப்பப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சிகிச்சைக்கான நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘சிகிச்சை நாட்கள் குறைக்கப்படவில்லை. மருத்துவக் கல்வி இயக்குனரகமும், சுகாதாரத்துறையும் அறிவுறுத்தியுள்ள டிஸ்சார்ஜ் வழிமுறையின்படியே நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி, அவர்களுக்குத் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகே வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள்.

உதாரணமாக நோயாளிகள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ ஆகிய மூன்று வகையாகப் பிரித்து சிகிச்சை வழங்குகிறோம். அறிகுறி, தொந்தரவு இல்லாத ‘ஏ’ பிரிவு நோயாளிகளை எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் எடுத்துப் பரிசோதனை செய்துவிட்டு மதுரை அருகே உள்ள தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வார்டு சிகிச்சைக்கு அனுப்புகிறோம்.

இவர்களுக்கு 10 நாட்கள் சிகிச்சை வழங்கி பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று தெரியவந்தால் வீட்டிற்கு அனுப்புகிறோம். மற்ற சாதாரணத் தொந்தரவுகள் இருக்கும் நோயாளிகளுக்குக் கண்டிப்பாக 14 நாட்கள் சிகிச்சை வழங்குகிறோம். அவர்களுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை வழங்குகிறோம்.

நோய் பாதிப்பு அதிகமுள்ள நோயாளிகளை, சிறப்பு அவசர சிகிச்சை வார்டில் அனுமதித்துக் குணமடையும் வரை சிகிச்சை வழங்குகிறோம். வயது அடிப்படையில் நோயாளிகளைப் பிரித்து சிகிச்சை வழங்குவதில்லை. அவரவர்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் அடிப்படையிலேயே சிகிச்சை அளிக்கிறோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT