கரோனா தொற்றைத் தடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் செயலிழந்துள்ளன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் ராகுல் காந்தியின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு, 'விவசாயிகள் பாதுகாப்பு தினமாக' தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (ஜூன் 19) கொண்டாடப்பட்டது .
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி விழாவைத் தொடங்கி வைத்தார்.
250 விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் நெல் விதைகளை வழங்கி கே.எஸ்.அழகிரி பேசியதாவது:
"ராகுல் காந்தியின் பிறந்த நாளை 'விவசாயிகள் பாதுகாப்பு தினமாக' கொண்டாடக் காரணம், காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகள் நலனின் அக்கறை கொண்டுள்ளதால்தான். எங்கள் ஆட்சிக் காலத்தில் 40 ஆயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தோம். மாநிலத்தில் எங்களுடன் கூட்டணியில் இருந்த திமுகவும் 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், தற்போது கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், விவசாயிகளின் விவசாயக் கடன்களை மத்திய -மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.
50 ஆண்டு காலம் இல்லாத அளவுக்கு நமக்கும் சீனாவுக்கும் எந்தக் காரணத்தினால் பிரச்சினை ஏற்படுகிறது என்று பலமுறை ராகுல் காந்தி கேட்டுள்ளார். சீனா பிரச்சினை தொடர்பாக பிரதமர் அறிக்கை வெளியிட வேண்டும். முதல் முறையாக சீனா பிரச்சினை தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம்.
கரோனா தொடர்பாக பலமுறை தமிழகத்தில் மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணிகளுக்குத் தலைமை ஏற்றிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை அழைத்து அரசு பேச வேண்டும் என்று பலமுறை சொல்லியிருந்தார். ஆனால், தொடர்ச்சியாக தமிழக அரசு அதைப் புறக்கணித்து வருகிறது.
உதாரணமாக தமிழகத்தில் மூன்று முக்கியப் பிரச்சினைகள் ஏற்பட்டன. ஊரடங்கு அறிவித்தவுடன் சென்னையில் இருந்து 3 லட்சம் மக்கள் வெளியேறினார்கள். ஆனால், அந்த மக்கள் வெளியேறும் முன்பே அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு அவர்களுக்குச் செய்து கொடுத்திருக்க வேண்டும். எங்களிடம் கேட்டிருந்தால் அதற்கான ஆலோசனையை நாங்கள் தெரிவித்திருப்போம். ஆனால், அரசு எதிர்க்கட்சிகளிடம் இதுகுறித்துக் கேட்கவில்லை. 3 லட்சம் பேர் வெளியேற ரயில் இல்லை, பேருந்து வசதி இல்லை. லாரி மூலமும் நடைபயணமாகவும் சென்றனர்.
இரண்டாவது பிரச்சினை சென்னையில் ஊரடங்குக்குள் ஒரு ஊரடங்கை அரசு அறிவித்தது. அதனால் என்னவாயிற்று என்றால் காசிமேடு மீன் மார்க்கெட், கோயம்பேடு காய்கறிச் சந்தைகளில் பொதுமக்கள் தீபாவளிக்குக் கூடுவதுபோல் பெரும் கூட்டமாகக் கூடியதால் கரோனா தொற்றின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது, அதைத் தவிர்த்திருக்கலாம்.
மூன்றாவது, கோயம்பேடு சந்ததையை முன்பே வேறு இடத்துக்கு மாற்றியிருக்கலாம். ஒரே இடமாக இல்லாமல் பல இடங்களாகப் பிரித்து மாற்றி அமைத்திருக்கலாம். இவற்றை எதிர்க்கட்சிகள் அரசுக்கு வலியுறுத்தின. ஆனால், அரசு செயல்படுத்தவில்லை. இதன் விளைவாக மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக மூன்று மாத காலமாக தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை, சேமிப்பும் இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு குடும்பத்துக்கு 20 கிலோ அரசியும், ஆயிரம் ரூபாய் பணமும் போதுமானதா? ராகுல் காந்தி கூறியது போல் குடும்பம் ஒன்றுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும்.
தமிழகப் பொருளாதாரத்தில் இதனைச் செய்ய இடமுண்டு. ஆனால், அரசு அதைச் செய்யவி்ல்லை. எதிர்க்கட்சிகள் சொன்னதை மத்திய , மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையில் தமிழக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், வருவாய்துறை, காவல்துறையின் செயல்படுகள் பெரிதும் போற்றப்பட வேண்டியது. இவர்களுடன் சேர்ந்து எதிர்க்கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கின. இருந்த போதிலும் கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது.
தமிழக அரசு மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் இரண்டு மாத சம்பளம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் கூறியிருந்தார். ஆனால், அரசு கூறியது போல் இவர்களுக்கு வழங்கவில்லை. தமிழக பொருளாதாரம் மிகவும் வலிமையான பொருளாதாரம். உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி மருத்துவர்களுக்கு இரண்டு மாத ஊதியத்தை வழங்கியிருக்கலாம். அப்படி வழங்கியிருந்தால் அவர்களின் பணி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
தாம் என்ன கூறினோம், என்ன செய்கின்றோம் என்று மத்திய அரசுக்கும் தெரியவில்லை, மாநில அரசுக்கும் தெரியவில்லை. இரண்டு அரசுகளும் செயலிழந்துள்ளன".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.