மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்: கோப்புப்படம் 
தமிழகம்

கரோனா அறிகுறிகள் இருந்தால் ஒளிவுமறைவின்றி வெளியே சொல்லுங்கள்; பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

பொதுமக்கள் தங்களுக்குக் கரோனா அறிகுறிகள் இருந்தால், ஒளிவுமறைவின்றி வெளியே சொல்ல வேண்டும் என, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை, ரிப்பன் மாளிகையில் இன்று (ஜூன் 19) மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"கரோனா அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறியும் பணியை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 70 நாட்களுக்கும் மேலாக கிட்டத்தட்ட 11 ஆயிரம் பணியாளர்கள் மூலம் மேற்கொண்டு வருகிறோம். தற்போது முழு ஊரடங்கால் 90 சதவீதத்தினர் வீட்டுக்குள் இருப்பார்கள். அதனால், வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்வதன் மூலம் அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறியலாம். இதுதவிர தினந்தோறும் மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். இந்த முகாம்களில் யாருக்காவது உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் அங்கேயே சிகிச்சை அளிக்கப்படும். கரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்குத் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இத்தகைய சோதனைகள் மூலம் ஏப்ரல் மாதத்திலிருந்து 40 ஆயிரத்து 882 பேருக்கு அறிகுறிகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். 30 ஆயிரத்து 725 பேருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 17 ஆயிரத்து 11 பேரை கரோனா பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம். இதில் 6,391 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களுள் 60-70 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர்.

மக்களுக்கு ஒரு வேண்டுகோள். காய்ச்சல் பரிசோதனைக்காக வரும் மாநகராட்சிப் பணியாளர்களிடம் உங்களுக்கு ஏதேனும் தொண்டை வலி, காய்ச்சல், இருமல், மூச்சுப் பிரச்சினை இருந்தால் ஒளிவுமறைவின்றி தெரிவிக்கவும். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். ஒருவருக்கு கரோனா தொற்று இருந்தால் அவர்களின் குடும்பத்தினரையும் 'பாசிட்டிவ்' என்று கருதி உடனடியாகப் பரிசோதனை மேற்கொள்ள இது மிகவும் உதவியாக இருக்கும்.

மாநகராட்சிப் பணியாளர்களுக்கு 'தெர்மல் கன்' (Thermal Gun) வழங்கியுள்ளோம். அதன் மூலம் ஒரு மீட்டர் இடைவெளியிலிருந்தே அவர்கள் உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பார்கள். மருத்துவ முகாம்களில் 'பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' (Pulse Oximetre) கருவி வழங்கியுள்ளோம். இதன் மூலம் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தெளிவாகக் கண்டறியப்படும். இதில், 95-க்குக் கீழ் இருந்தால் அறிகுறிகள் உள்ளன, மருத்துவர்களை நாட வேண்டும் என உணர்த்திவிடும். இதை, அனைத்து மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கியுள்ளோம். மண்டலங்கள் 4, 5, 6-ல் 3 வார்டுகளுக்கு இதனை முழுமையாக வழங்கியுள்ளோம். இந்தக் கருவியை நிறைய கொள்முதல் செய்ய உள்ளோம். அறிகுறிகள் இல்லாமல் இருந்தாலும் இந்தக் கருவி உணர்த்திவிடும்.

நிறையப் பேர் அறிகுறிகளை வெளியில் சொல்வதில்லை என எங்களுக்கு கருத்துக்கணிப்பு வந்திருக்கிறது. அறிகுறிகளை வெளியில் சொல்லியிருந்தால் 10-15% இறப்புகளைத் தவிர்த்திருக்கலாம். பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்".

இவ்வாறு பிரகாஷ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT