10, 11 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சிதான். தேர்ச்சி விவரத்தைத் தெரிவிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது. தொற்று குறையாத நிலையில் மாணவர்கள் மொத்தமாக லட்சக்கணக்கில் தேர்வு எழுத வந்தால் கரோனா தொற்று ஏற்படும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
தேர்வு ரத்து, அனைவரும் தேர்ச்சி என அறிவித்தாலும் மாணவர்கள் தங்களது காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும் என வற்புறுத்துவதாகத் தகவல் வெளியானது. இதனால் மீண்டும் லட்சக்கணக்கில் மாணவர்கள் வெளியில் வர வாய்ப்புள்ளதாக எதிர்ப்பு வெளியானது. இதையடுத்து மாணவர்களையோ அல்லது பெற்றோர்களையோ விடைத்தாள்களை ஒப்படைக்கவேண்டும் என அழைக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் காலாண்டு, அரையாண்டில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தேர்வுகள் கூடுதல் பொறுப்பு இயக்குனர் பழனிசாமியின் உத்தரவு:
''2019-2020 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் (புதிய பாடத்திட்டம்) மற்றும் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், தொழிற்கல்வி, கணக்கு பதிவியல் (பழைய பாடத் திட்டம்) ஆகியவற்றுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாகின்றனர். மாணவர்களின் மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும் பொது அறிவின் அடிப்படையில் 20 செய்து மதிப்பெண் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வரசாணைப்படி மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவர். எனவே இவ்விவரத்தினை தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குத் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது”.
இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்தச் சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், இணை இயக்குனர் (கல்வி) பாண்டிச்சேரி, அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.