புதுச்சேரியில் 8 மாத கர்ப்பிணி உட்பட மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூன் 19) புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று இறுப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 287 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 162 ஆகவும் உயர்ந்துள்ளது. 118 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் மேலும் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 12 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், ஒருவர் காரைக்காலிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பாதிக்கப்பட்ட நபர்களில் 7 பேருக்கு எப்படி தொற்று பரவியது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். மற்றவர்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர். இதில் 3 பேர் மேட்டுப்பாளையம் முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தவர்கள். மேலும், காரைக்காலில் 8 மாத கர்ப்பிணி பெண்ணும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 131 பேர், ஜிப்மரில் 23 பேர், காரைக்காலில் 7 பேர், மாஹே பிராந்தியத்தில் ஒருவர் என மொத்தம் 162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 11 ஆயிரத்து 679 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 11 ஆயிரத்து 231 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. இன்னும் 164 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன. தற்போது 18 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. 2 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.
இன்று மாநில எல்லையில் ஆய்வு செய்தேன். புதுச்சேரியில் இருந்து நிறைய பேர் தமிழக பகுதிக்கு செல்கின்றனர். அவர்களிடம் விசாரித்தால் வேலைக்கு செல்வதாக கூறுகின்றனர். நிறைய பேர் முகக்கவசம் இல்லாமல் செல்கின்றனர். அவர்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டு முகக்கவசம் வழங்கப்படுகிறது. எல்லை பகுதிகளில் மருத்துவ கண்காணிப்பு குழுவை நியமிக்குமாறு காவல்துறையினர் கேட்கின்றனர்.
எல்லைகளில் 2 நாட்களில் மருத்துவ குழு நியமிக்கப்படும். நிறைய பேருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளது. ஆனாலும் ஆரோக்கியமாக இருந்த நபர்களே உயிரிழக்கின்றனர். நேற்று கூட நல்ல நிலையில் இருந்த 37 வயது மற்றும் 52 வயதுடைய நபர்கள் இறந்துள்ளனர்.
இந்த நோயின் வீரியம் தெரியாமல் பொதுமக்கள் உள்ளனர். இது உயிரை பறிக்கக்கூடிய நோய். எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டா, இயக்குநர் மோகன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.