வட்டார மருத்துவ அளவிலான சிறப்புக் குழுக்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. 
தமிழகம்

சென்னையிலிருந்து விழுப்புரம் வருபவர்களில் 20 முதல் 30 சதவீதத்தினருக்கு கரோனா தொற்று; மாவட்ட ஆட்சியர் தகவல் 

எஸ்.நீலவண்ணன்

சென்னையிலிருந்து விழுப்புரம் வருபவர்களில் 20 முதல் 30 சதவீதத்தினர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, அம்மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க வட்டார மருத்துவ அளவிலான சிறப்புக் குழுக்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 19) மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், ஏடிஎஸ்பி தேவநாதன், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் ஆட்சியர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"விழுப்புரம் மாவட்டத்தில் 505 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 379 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்த நிலையில், 106 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினமும் 1,200 முதல் 1,300 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கரோனா தொற்றைக் கண்டறிய சிறப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை முகக்கவசங்கள் அணியாதவர்களிடமிருந்து ரூ.8 லட்சம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருபவர்கள், முழுமையாக மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்படுவதோடு அவர்கள் கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர். அவர்களைப் பரிசோதனைக்கும் உட்படுத்துகிறோம். சென்னையிலிருந்து வருபவர்களில் 20 முதல் 30 சதவீதத்தினர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சிறப்புக் குழுக்கள் மூலம் நோய்த்தொற்று உள்ளவர்களையும், அவர்களோடு தொடர்புடைய நபர்களையும் கண்டறிகிறோம். விழுப்புரம் மாவட்டத்தில் 745 படுக்கை வசதிகள் தற்போது வரை தயாராக உள்ளன. 3,000 பேர் தங்கக்கூடிய அளவில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன".

இவ்வாறு ஆட்சியர் அண்ணாதுரை கூறினார்.

SCROLL FOR NEXT