உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனைக்கு நேற்று (ஜூன் 18) சென்றார். பரிசோதனையில், அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக மருத்துவர்கள் கூறும்போது, "அமைச்சருக்கு லேசான தொற்று உள்ளது. அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது" என்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொலைபேசி மூலம் அமைச்சர் கே.பி.அன்பழகனைத் தொடர்புகொண்டு இன்று (ஜூன் 19) நலம் விசாரித்தார்.
இது தொடர்பாக, ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும்; பொதுவாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.