சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் முழு ஊரடங்கையொட்டி திருவல்லிக்கேணி, அண்ணாசாலை பகுதியில் போலீஸார் மேற்கொண்ட வாகனச் சோதனைப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.
கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர், அவசியத் தேவை இன்றி யாரும் வெளியில் வரக்கூடாது என எச்சரித்தார். சென்னை போலீஸார் 18 கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர்.
அதன்படி நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. சென்னையில் 288 பகுதிகளில் போலீஸார் தடுப்பு அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை முழுவதும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை போலீஸார் ஆய்வு செய்து அவசியமின்றி வருபவர்கள் வாகனங்களைப் பறிமுதல் செய்கின்றனர்.
முறையான காரணங்கள், மருத்துவக் காரணங்கள், அனுமதிச் சீட்டு வைத்துள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஹெல்மட் அணியாமல், முகக்கவசம் இன்றி வந்தவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்தனர்.
முழு ஊரடங்கையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று (19.06.2020) காலை திருவல்லிக்கேணி, அண்ணாசாலையிலுள்ள, அண்ணா சிலை அருகே காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.
மேலும் பொதுமக்களைக் கண்காணிக்க போலீஸாரால் பயன்படுத்தப்படும் ட்ரோன் கேமராவின் இயக்கத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ட்ரோன் கேமராவில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கரோனா தொடர்பான விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்படுவது பற்றியும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். இந்தச் சோதனை ஜூன் 30-ம் தேதி வரை 24 மணி நேரமும் தொடரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று (18.06.2020) காலை 6 மணி முதல் இன்று (19.06.2020) காலை 6 மணி வரையில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 927 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.