சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவை கோயிலுக்கு உள்ளே மிகவும் எளிமையான முறையில் நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தீட்சிதர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும், கோயிலுக்குள்ளே பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தீட்சிதர்கள் 50 பேர் மட்டுமே கோயிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு தீட்சிதர்கள் 150 பேரை அனுமதிக்க வேண்டும் என தீட்சிதர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, கோயிலுக்கு உள்ளே செல்லும் 50 தீட்சிதர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் கீழ கோபுர வாயிலில் தடுப்புக் கட்டைகள் மற்றும் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு கோயிலுக்குள்ளே அனுமதிக்கப்படும் நபர்களை மீறி வேறு யாரும் செல்லாதவாறு கண்காணிக்கப்பட்டு வந்தனர். பின்னர் பெயர்ப் பட்டியலில் உள்ளவர்களை மட்டும் கோயிலுக்கு உள்ளே கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு தெர்மல் கருவி மூலம் பரிசோதனை செய்து முகக்கவசம் அளித்து கைகளில் சானிடைசர் தெளித்து அனுமதித்தனர்.
கோயிலுக்கு உள்ளே செல்வதில் சில தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று (ஜூன் 19) காலை குறைந்தளவே தீட்சிதர்கள் கலந்து கொண்ட கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல் 28-ம் தேதி நடைபெறும் தரிசன விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.