உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலர் செந்தில்குமார் குடும்பத்தாரிடம்  ரூ.15 லட்சத்துக்கான காசோலையை வழங்கும் பேட்ச் மெட் காவலர்கள். 
தமிழகம்

உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலர்களுக்கு 'பேட்ச் மேட்' காவலர்கள் வழங்கிய ரூ.15 லட்சம் நிதி

எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம் அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலர் குடும்பத்தாருக்கு உடன் பயிற்சி பெற்ற காவலர்கள் ஒன்றிணைந்து ரூ.15 லட்சம் நிதி வழங்கியுள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் 'ஸ்கூல் மேட்', 'காலேஜ் மேட்' ஏன் 'ரூம் மேட்' கூட இருப்பார்கள். அவர்கள் வாழ்வின் ஒரு அங்கமாக மாறி இருப்பார்கள். ஆனால், உடன் பணியில் சேர்ந்து பயிற்சி பெற்ற காவலர் உடல் நலக்குறைவால் உயிரிழக்க, அவருடன் பயிற்சி பெற்ற காவலர்கள் ஒன்று சேர்ந்து திரட்டிய நிதி ரூ.15 லட்சத்தை இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு அளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (36), 2009-ம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் காவலர் தேர்வில் தேர்வாகி, பயிற்சி பெற்று டெல்லி சிறப்பு காவல் படையில் பணிபுரிந்தார். பின்னர், சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தபோது மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 28-ம் தேதி சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை அறிந்த அவரின் 'பேட்ச் மேட்' ஒன்றிணைந்து திரட்டிய நிதி ரூ.15 லட்சத்து 49 ஆயிரத்து 900-க்கான காசோலையை கடந்த சில நாட்களுக்கு முன் செந்தில்குமாரின் மனைவி சுகந்தியிடம் வழங்கியுள்ளனர்.

இது குறித்து மறைந்த செந்தில்குமாருடன் தேர்வாகி பயிற்சி பெற்று பணியாற்றிவரும் காவலர் சக்திவேல் கூறும்போது, "2009-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுமார் 6 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் பயிற்சி பெற்று தற்போது முதல் நிலை காவலர்களாக பணியாற்றிவருகிறோம்.

'டெலிகிராமில்' எங்கள் 'பேட்ச் மேட்' குழுவில் தற்போது 3,500 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரின் பங்களிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய அருண் காந்தி இறந்தபோது இதே போல நிதி திரட்டி ரூ.12 லட்சம் வழங்கினோம். அதன் தொடர்ச்சியாக தற்போது செந்தில்குமாரின் குடும்பத்தாருக்கு நிதி உதவி வழங்கியுள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணியாற்றும் எங்களின் 'பேட்ச் மெட்' 6,000 பேரையும் இணைத்து எங்கள் குடும்பத்தினருக்கு நாங்கள் உறுதுணையாக எப்போதும் இருப்போம்" என்றார்.

மேலும், இது குறித்து மறைந்த காவலர் செந்தில்குமாரின் தந்தை தண்டபாணியை தொடர்புகொண்டு கேட்டபோது, "நான் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று அதன் பின் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். இப்படி ஒரு நிகழ்வை என் வாழ்நாளில் முதன் முதலில் காண்கிறேன். என் மருமகள் சுகந்தி எம்பிஏ படித்துள்ளார். டெல்லி வாழ் தமிழரான இவருக்கு இந்தி, ஆங்கிலம் நன்றாக பேச எழுத தெரியும். இவருக்கு தமிழ்நாடு காவல்துறை கருணை அடிப்படையில் பணி வழங்கும் என நம்புகிறேன். என் பேரன் விக்னேஷ்குமார் தற்போது 1-ம் வகுப்பு படித்து வருகிறார்" என்றார்.

SCROLL FOR NEXT