தமிழகம்

செப்டம்பர் வரை ரேஷனில் இலவச அரிசி, பருப்பு வழங்க உள்ளதால் தமிழகத்துக்கு கூடுதலாக தானியம் ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு அமைச்சர் காமராஜ் கோரிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு செப்டம்பர் வரை இலவசமாக வழங்க அரிசி, பருப்பு வகைகளை கூடுதலாக ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் தமிழக உணவுத் துறை அமைச்சர்காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது விநியோகத் திட்டம் தொடர்பாக மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுடன், தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அமைச்சர் காமராஜ் பேசியதாவது:

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களின் சிலபகுதிகளில் முழு ஊரடங்கு ஜூன் 19முதல் 30-ம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள அனைத்து அரிசி குடும்பஅட்டைதாரர்களுக்கும் ரூ.1,000நிவாரணம் வழங்கப்படுகிறது.

கடந்த ஜூன் 12-ம் தேதி, தமிழகமுதல்வர், தமிழகத்தில் வரும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு தேவையான அரிசி, பருப்பை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கூடுதல் தானியங்களை ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில், தமிழக உணவுத் துறைச் செயலர் தயானந்த் கட்டாரியா, நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம்.சுதாதேவி, உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் சஜ்ஜன்சிங் சவான் ஆகியோர் பங்கேற்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT