தமிழகம்

தமிழக பாஜக சார்பில் நாளை ‘காணொலி பேரணி’- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார்

செய்திப்பிரிவு

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று 6 ஆண்டுகள் முடிந்து 7-வது ஆண்டில் அடியெடுத்து வைத்ததையொட்டி தமிழக பாஜக சார்பில் நாளை நடக்கும் காணொலி பேரணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றுகிறார்.

கடந்த 2014 மே 26-ம் தேதிபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. தொடர்ந்து 2-வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று, 2019 மே 30-ம் தேதி மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றது. 6 ஆண்டுகளை நிறைவு செய்து 7-வது ஆண்டில் மோடி அரசு அடியெடுத்து வைத்துள்ளது.

தற்போது கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பாஜக சார்பில் மக்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களை நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே, மாநிலம் வாரியாக மத்திய அமைச்சர்கள், பாஜக முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் காணொலி பேரணி கடந்த இரு வாரங்களாக நடந்து வருகிறது.

தமிழக பாஜக சார்பில் நாளை (ஜூன் 20) காலை 11 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காணொலி பேரணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார். இந்த பேரணிக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமை வகிக்கிறார்.

10 லட்சத்துக்கும் அதிகமானோர்

நிர்மலா சீதாராமனின் உரையை முகநூல், ட்விட்டர், யு-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்க்க பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

பாஜக அரசின் 7-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தை தமிழில் மொழிபெயர்த்து அதை பாஜகவினர் வழங்கி வருகின்றனர்.

SCROLL FOR NEXT