சீனப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்ப்போம் என கோவில்பட்டியில் பாஜகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
கோவில்பட்டி பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சீன நாட்டுடன் நடந்த சண்டையில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, சீன நாட்டின் தயாரிப்புப் பொருட்களை உபயோகிக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட இளைஞரணி தலைவர் கே.மாரிச்செல்வம் தலைமை வகித்தார். நகர இளைஞரணி தலைவர் எம்.பி.காளிதாசன், பாரதிய ஜனதா மாவட்ட செயலாளர் கே.வேல்ராஜா முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, அனைவரும் சீன நாட்டு பொருட்களை தவிர்ப்போம். சீன நாட்டின் தயாரிப்பு பொருட்களை விற்பனையை தவிர்ப்போம். அந்நாட்டு பொருட்களை வாங்கி உபயோகிப்பதை தவிர்ப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதே போல், கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வழக்கறிஞர் எஸ்.ரெங்கநாயகலு, பொதுச்செயலாளர் பி.பரமேஸ்வரி உள்ளிட்டவர்கள் வழங்கிய மனுவில், இந்திய எல்லையில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்ட சீனாவை கண்டிக்கும் விதமாக இந்திய சந்தையில் அதிகளவு விற்பனையாகி வரும் சீனப்பொருட்களை மத்திய அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும்.
இந்திய துறைமுகங்களில் சீனப்பொருட்கள் இறக்குமதியை தடை செய்ய வேண்டும். மேலும், சீனப்பொருட்களுக்கு இந்திய சந்தையில் அதிகளவு வரி விதிக்க வேண்டும்.
சமூக வளைதலங்களில் சீனாவுக்கு ஆதரவாகவும், இந்திய ராணுவத்தை இழிவாகவும் பதிவிடுவோர் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளனர்.