சேலம் அருகே மர்மப்பொருள் வெடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்துத் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சேலம் அருகே பனமரத்துப்பட்டி தும்பல் பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி மணி (50). இவர் நேற்று (ஜூன் 17) மதியம் விவசாய நிலத்தில் இருந்து எடுத்து வந்த மர்மப்பொருளை இயக்க வைக்க மின்சார இணைப்புகள் கொடுத்து, ஒயரைப் பொருத்தியுள்ளார். அப்போது, அந்தப் பொருள் வெடித்ததில், மணி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் அருகில் நின்றிருந்த மகள் வழிப் பேத்தி சவுமியா (14), அண்ணன் மகன் வசந்தகுமார் (38), நண்பர் நடேசன் (50) ஆகியோரும் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்த சவுமியாவைத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மற்ற இருவரும் லேசான காயம் அடைந்து தப்பினர்.
இதுகுறித்து எஸ்பி தீபாகாணிக்கர், ரூரல் டிஎஸ்பி உமாசங்கர் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு, மணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸார், தடய அறிவியல் நிபுணர்கள் நிகழ்விடத்திற்கு வந்து, வெடித்த மர்மப்பொருள் குறித்து ஆய்வு செய்து, தடயங்களைச் சேகரித்தனர். ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்ததில், வெடித்த பொருள் வெடிகுண்டு இல்லை என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அது என்ன பொருள், எப்படி வெடித்தது என்பது குறித்து தடய அறிவியல் நிபுணர்கள் தொடர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மணி இயக்கி வெடிக்கக் காரணமான பொருள் குறித்து போலீஸார் அவரது மனைவி அம்சவேணியிடமும், உடன் இருந்த வசந்தகுமார், நடேசனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மணி மின்சாதனப் பொருட்களைக் கையாளுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும், எஃப்எம் ரேடியோ போன்ற பொருளை மணி கொண்டு வந்து, ஸ்பீக்கர், ஆம்ளிஃபயர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு இயக்கிப் பார்த்தபோது, வெடிவிபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.