அடுத்தடுத்து கரோனா தொற்று பரவுவதால், கோவை ஆர்.ஜி.புதூர் ராமர் கோயில் வீதி தனிமைப்படுத்தப்பட்டது.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஆர்.ஜி.புதூர் ராமர் கோயில் வீதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவருக்குக் கரோனா தொற்று இருந்ததாகவும், அதனால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ராமர் கோயில் வீதியில் மொத்தம் 10 வீடுகள் உள்ளன. இங்கு 26 பேர் வசித்து வருகின்றனர். உயிரிழந்த இளைஞர் மேற்கண்ட பகுதியில் சகோதரர் வீட்டில் வசித்து வந்தார்.
இளைஞரின் உயிரிழப்பைத் தொடர்ந்து மாநகராட்சி சுகாதாரத்துறையினர் அந்த இளைஞரின் சகோதரர் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினருக்குக் கரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனையை மேற்கொண்டனர். இதில் கடந்த 2 நாட்களில் 12 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "ஆர்.ஜி.புதூர் ராமர் கோயில் வீதியில் 12 பேருக்குத் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அந்தப் பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்துள்ளது. அந்த வீதிக்குச் செல்லும் ஒரு நுழைவுப்பாதையை தவிர, மற்றவை அடைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட வீதியில் வசிக்கும் மக்கள் வெளியே வரவும், வெளி நபர்கள் அந்தப் பகுதிக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட வீதியில் கிருமிநாசினி தெளிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக மாநகராட்சி ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதிக்கு அருகேயுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.