முகக்கவச தினத்தை முன்னிட்டு அனைத்து அரிமா சங்கம் சார்பாக ஓசூர் உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு 4000 முகக் கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
ஓசூர் ராம்நாயக்கன் ஏரிக்கரையில் தற்காலிக உழவர் சந்தை இயங்கி வருகிறது. இங்கு அதிகாலை முதல் காய்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் காய்கறிகளை வாங்கிச் செல்லும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் குவிவது வழக்கம். அவர்களிடையே கரோனா நோய்த் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முகக் கவச தினம் இன்று கொண்டாடப்பட்டது.
ஓசூர் அனைத்து அரிமா சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரிமா சங்க மாவட்ட இரண்டாம் துணைநிலை ஆளுநர் டி.ரவிவர்மா தலைமை தாங்கி, உழவர் சந்தையில் முகக் கவசம் வழங்கினார். பின்பு அரிமா சங்க மாவட்டத் தலைவர் ஒய்.வி.எஸ்.ரெட்டி உள்ளிட்ட அனைத்து அரிமா சங்கங்களின் நிர்வாகிகள் மூலமாக உழவர் சந்தை பகுதியில் கரோனா நோய்த் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது, வீட்டில் இருந்து வெளியில் வரும்போது தவறாமல் முகக் கவசம் அணிந்து வெளியில் வருவதை அன்றாடப் பழக்கமாகக் கொள்ள வேண்டும். மேலும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களில் அனைவரும் தவறாமல் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பன குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் ராம்நாயக்கன் ஏரிக்கரை தற்காலிக உழவர் சந்தையில் காய்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் காய்கறிகளை வாங்கிச் செல்ல உழவர் சந்தைக்கு வருகை தந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.