தமிழகம்

மதுரை எஸ்.பி. அலுவலக கட்டுப்பாட்டு அறை காவலருக்கு கரோனா: காவலர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கு பரிசோதனை

என்.சன்னாசி

மதுரை எஸ்.பி. அலுவலக கட்டுப்பாட்டு அறை காவலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அழகர் கோயில் சாலையில் சர்வேயர் காலனி பகுதியில் செயல்படுகிறது. முதல்மாடியில் எஸ்.பி மற்றும் அவரது தனிப்பிரிவு, யூனிட் (புலனாய்வு) அலுவலகங்கள், தரைத்தளத்தில் மாவட்ட குற்றப்பிரிவு, விரல்ரேகை, தொழில்நுட்ப பிரிவு, அமைச்சுப் பணியாளர்கள் அலுவலங்களும் உள்ளன.

அமைச்சுப் பணியாளர்கள், தனிப்பிரிவு காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் என, சுமார் 150க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அங்குள்ள கரோன தடுப்பு கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த 35 வயது கொண்ட காவலர் ஒருவருக்கு, 2 நாளுக்கு முன்பு லேசான காய்ச்சல், தும்மல் இருந்தது.

அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். 3 முறை மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியபோது, ஒருமுறை மட்டும் நெகடிவ் என, ரிசல்ட் வந்தது. அவர் மருத்துவ கரோனா தடுப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அங்கு பணி புரிந்த அமைச்சுப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நடவடிக்கை எடுத்தார்.

இதன்படி, இரு குழுவாக பிரிக்கப்பட்டு, நேற்று முன்தினம் காவலர்களுக்கும், நேற்று அமைச்சு பணியாளர்களுக்கும் மதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது.

இதையொட்டி மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அறைகள் திறந்து இருந்தாலும், அமைச்சுப் பணியாளர்கள், காவலர்கள் பணிக்கு வரவில்லை. ஓரிரு அலுவலர், காவலர்கள் மட்டும் அவசர தேவைக்கென பணியில் இருந்தனர். அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஓரிரு நாளுக்கு கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவலர்கள், பணி யாளர்களுக்கு எடுத்த தொற்று மாதிரி ஆய்வுக்கான முடிவு தெரியும் வரை மிக குறைந்த நபர்களே பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என,எஸ்பி அலுவலகம் தரப்பில் கூறுகின்றனர்.

இது குறித்து தனிப்பிரிவு அதிகாரி கூறுகையில், ‘‘ ஒருவருக்கு தொற்று அறிகுறியால் முன்எச்சரிக்கையாக அமைச்சு பணியாளர் கள், காவலர்களுக்கு பரிசோதனை செய்கிறோம். எஸ்பியும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார். ஆனாலும், குறைந்த நபர்களை கொண்டு அலுவலகம் செயல்படுகிறது.

அலுவலகத்திற்கு வெளியில் வைத்து புகார் மனுக்கள் பெறப்பட்டு, காவல் நிலையத்திற்கு அனுப்புகிறோம். ஓரிரு நாள் மட்டும் வழக்கு பதிவு, குற்றச் சம்பவ விவரங்களை மொபைல், இணையம் வழியாக தேவையான தகவல்கள் அதிகாரிகளுக்கு பகிரப்படும். தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படும். இதன்பின், வழக்கம் போல் செயல்படும்,’’ என்றனர்.

SCROLL FOR NEXT