அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலம் தேறி வரும் சிறுவன் 
தமிழகம்

சிறுவனின் கழுத்தில் சிக்கிய 2 அடி இரும்பு கொக்கி: ஒரு மணி நேரம் போராடி அகற்றிய கோவை அரசு மருத்துவர்கள்

க.சக்திவேல்

சிறுவனின் கழுத்தில் சிக்கிய இரும்பு கொக்கியை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு மணி நேரம் அறுவை சிசிச்சை செய்து பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராஜி என்பவரின் 7 வயது மகன், அங்குள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். தங்கள் வீடு அருகே உள்ள ஒரு மரத்தில் தொட்டில் கட்டி சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென மரக்கிளை ஒடிந்து விழுந்துள்ளது. அப்போது, வலது கழுத்தில் தாடை எலும்பின் பின்புறமாக குத்திய தொட்டில் கட்டும் இரும்புக் கம்பியின் கொக்கி, காது அருகே வெளியே வந்தது. ரத்தம் வெளியேறி சிறுவன் அலறித் துடித்ததை அறிந்த பெற்றோர், ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

இதையடுத்து, குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஆர்.ரங்கராஜன் தலைமையில், மருத்துவர்கள் தர்மேந்திரா, முத்துலிங்கம், செந்தில்குமார், சீனிவாசன், மயக்கவியல் துறை தலைவர் ஜெய் சங்கர நாராயணன், வசந்தி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், கடந்த 14-ம் தேதி அறுவை சிகிச்சை செய்து கம்பியை பாதுகாப்பாக அகற்றினர். சிகிச்சை முடிந்து சிறுவன் நலமுடன் வீடு திரும்பினார்.

4 மணி நேர போராட்டம்

இதுதொடர்பாக மருத்துவமனையின் டீன் பி.காளிதாஸ் கூறும்போது, "ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 2 அடி நீள இரும்புக் கம்பியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தற்போது அந்த சிறுவனால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சாப்பிட முடிகிறது. மூளைக்குச் செல்லும் முக்கிய ரத்தக் குழாய்கள், கம்பி குத்திய இடத்துக்கு சற்று கீழேதான் இருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக அதில் ஏதும் சேதாரம் ஏற்படவில்லை. திருப்பூரில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வந்த நேரம், ஸ்கேன் பரிசோதனை நேரம், அறுவை சிகிச்சை என மொத்தம் 4 மணி நேரம் கம்பியுடன் சிறுவன் இருந்துள்ளான்" என்றார்.

SCROLL FOR NEXT