அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் வழக்கறிஞர்களுடன் மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கிலிருந்து 56 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாக புகார் தெரிவித்து ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக்கோரி பீட்டா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2014-ல் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராகவும், தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும் தமிழகம் முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூரில் ஆயிரக்கணக்கானோர் பகல், இரவு பாராமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
இதை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவை மாநில அரசே எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் 2017-ல் ஜல்லிக்கட்டு சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் நிரந்தர சட்டம் நிறை வேற்றக்கோரி போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.
அலங்காநல்லூரில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக சையத் உமர் முக்தர், சகாய ஆன்றோ கிளைட்டன், கம்பூர் செல்வராஜ், யுக, கீதா, ரெங்கராஜன், தமிழரசன், வினோத்ராஜ், முகிலன் உள்பட 64 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற்றது. இருப்பினும் சிபிசிஐடி பதிவு செய்த வழக்கு திரும்பப் பெறப்படவில்லை.
இந்த வழக்கு மதுரை 5-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் 2018 முதல் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை நிலுவையில் இருந்தபோது 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீதான வழக்கு தனியே பிரிக்கப்பட்டது. இந்நிலையில் எஞ்சிய 56 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ஆர்.ஜோசப்ஜாய் தீர்ப்பளித்தார்.