தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆதனூர் பழவாறு கரையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள். 
தமிழகம்

வேளாண்மை மின்மானியம் பெற போராடி உயிர்நீத்த விவசாயப் போராளிகள்; வீரவணக்கம் செலுத்திய விவசாயிகள்

வி.சுந்தர்ராஜ்

வேளாண்மைக்கு மின்மானியம் பெற போராடி உயிர்நீத்த விவசாயப் போராளிகளுக்கு கும்பகோணம் அருகே வீரவணக்கம் செலுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அருகே ஆதனூர் பழவாறு கரையில் இன்று (ஜூன் 18) நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னோடி விவசாயி ஆதனூர் மகாலிங்கம் தலைமை வகித்தார். கு.கலியமூர்த்தி முன்னிலை வகித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுந்தரவிமல்நாதன் வீரவணக்க முழக்கமிட்டுக் கூறுகையில், "வேளாண் உணவு உற்பத்திக்கான மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு 2 பைசா உயர்த்தப்பட்டதைக் கண்டித்து விவசாயத்துக்குக் கட்டணமில்லா மின்மானியம் வழங்கிடக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள், உழவு மாடுகள், ஏர் கலப்பைகள், மாட்டு வண்டிகளுடன் 1970-ம் ஆண்டில் விவசாயிகளின் உரிமைகளுக்கான விடுதலைப் போராளி நாராயணசாமி நாயுடு தலைமையில் தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டத்தில் சுமார் 59 விவசாயிகள் உயிரிழந்தனர்.

கொங்கு மண்டலங்களைச் சேர்ந்த மாரப்ப கவுண்டர், ஆயிக்கவுண்டர், ராமசாமி கவுண்டர் ஆகியோர் 1970-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் போராட்டம் நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் தங்கள் இன்னுயிர்களை இழந்தனர். இதன் 50-வது ஆண்டை நினைவுகூரும் நிகழ்வில், விவசாயிகளின் உரிமைகளுக்காக உயிர் துறந்து வீரமரணமடைந்தவர்கள் பெற்றுத் தந்த வேளாண் உணவு உற்பத்தி மின்மானிய உரிமையை இன்று இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகள் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். மின்மானிய உரிமையில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ள நிலையில், வீரமரணமடைந்தவர்களுக்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மத்திய அரசின் புதிய மின் திருத்தச் சட்டம் 2020-ல் விவசாயிகள் மட்டுமல்லாது, வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழைகள், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்பதால் இந்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும். இந்தக் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தினந்தோறும் ஒரு கிராமத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது" என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT