மதுரையில் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் ‘கரோனா’ நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சமூக பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திகைத்துப்போய் உள்ளனர்.
மதுரையில் ‘கரோனா’ தொற்று ஆரம்பத்தில் வேகமாகப் பரவியது. ஊரடங்கு ஆரம்பித்ததும், ஒரளவு இந்த தொற்று நோய் கட்டுக்குள்ளாகவே இருந்தது. தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் ‘கரோனா’ தொற்று பூஜ்ய நிலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. தூத்துக்குடி மாவட்டம் பூஜ்ய நிலையை அடைந்தது.
திடீரென்று மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் வசித்த தமிழர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். சென்னையில் ‘கரோனா’ நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பரவியதால் அங்கிருந்தோர் தென்மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.
அவர்களில் பலர் இ-பாஸ் பெறாமலும், போலி இ-பாஸ் பெற்றும் வந்ததால் அவர்களை கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட சிக்கலால் அவர்களுக்கு முறையான பரிசோதனை செய்யப்படவில்லை. அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவியதால் தென் மாவட்டங்களில் கடந்த 2 வாரமாக மீண்டும் ‘கரோனா’ தொற்று வேகம் காட்டத்தொடங்கியது. குறிப்பாக மதுரையில் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் ‘கரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 9-ம் தேதி 16 பேரும், 10-ம் தேதி 10 பேரும், 11-ம் தேதி 19 பேரும், 12-ம் தேதி 33 பேரும், 13-ம் தேதி 15 பேரும், 14-ம் தேதி 16 பேரும், 15-ம் தேதி 33 பேரும், 16-ம் தேதி 20 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றும் ஒரே நாளில் 17-ம் தேதி 27 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை மதுரை மாவட்டத்தில் 493 ஆக உயர்ந்துள்ளது.
இதே வேகத்தில் ‘கரோனா’ தொற்று அதிகரித்தால் இரட்டை இலக்கம் மூன்று இலக்கமாகி மாறி மதுரையில் சிகிச்சைக்கான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். ஆரம்பத்தில் நடந்த 2 பேர் பலியை தவிர தற்போது வரை ‘கரோனா’ உயிர் பலி மதுரையில் இல்லை என்று சுகாதாரத்துறை கூறுகிறது.
ஆனால், ‘கரோனா’வுக்கு இறப்பவர்களையும், பரிசோதனை விவரங்களையும் அதிகாரிகள் மறைப்பதாகவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். பரிசோதனையை அதிகரித்து, சமூகப் பரவலை தடுத்தால் மட்டுமே மதுரையை சென்னையை போல் ஆகாமல் தடுக்க முடியும்.