வறுமை காரணமாக பெண் குழந்தையை தத்துக்கொடுக்க முன்வந்த மதுரையைச் சேர்ந்த தாய் ஒருவர் சமூக நலத்துறை அதிகாரிகளிடம் குழந்தையை ஒப்படைத்தார்.
மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகிலுள்ள கிண்ணிமங் கலம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன.
அதே தம்பதிக்கு செக்கானூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேலும், ஒரு பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் கணவர் இறந்த நிலையில், வறுமையால் 3 குழந்தைகளை வளர்க்க முடியாத சூழலில், மூன்றாவது பிறந்த பச்சிளங் குழந்தையை தத்துக் கொடுக்க அந்தத் தாய் திட்டமிட்டார். தனது விருப்பத்தை மருத்துவர்களிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கணேசன், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டிராஜா ஆகியோரிடம் மருத்துவர்கள் முன்னிலையில் குழந்தையை ஒப்படைத்தனர். அக்குழந்தை அரசு காப்பகத் தில் சேர்க்கப்பட்டுள்ளது.
தகுதியான நபர்கள் தத்தெடுக்க முன்வரும் நிலையில், அரசு விதிகளுக்கு உட்பட்டு முறைப்படி குழந்தை தத்துக் கொடுக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.