தமிழகம்

ஊரடங்கு காலத்தில் அலுவலகம் செல்லும் வழக்கறிஞர்களை தடுக்க வேண்டாம்: பார்கவுன்சில் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ஊரடங்கு காலத்தில் வழக்கறிஞர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தடுக்க கூடாது, வழக்கறிஞர்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள், பார்கவுன்சில் அட்டை இருந்தால் அனுமதிக்கவேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக அரசு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கை அமல்படுத்துகிறது. இந்த முறை போலீஸ் கடுமையாக சோதனையிட உள்ளது. இதனால் பொதுமக்கள் இந்த நாட்களில் அவசியமின்றி வெளியில் வரவேண்டாம் என கோரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வழக்கறிஞர்கள் வழக்கில் வாதாட காணொலி வசதி அலுவலகங்களில் உள்ளதால் அவ்வாறு செல்லும் நேரத்தில் மோதல் எதுவும் ஏற்படாமல் இருக்க பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் காவல்துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காணொலி மூலம் வழக்கில் ஆஜராகும் வசதியை வழக்கறிஞர்களின் அலவலகங்களில்தான் செய்திருப்பதால் அவர்கள் செல்வதை தடுக்க கூடாது என கோரிக்கை வைத்துள்ளார்

தவிர்க்க முடியாத காரணங்களால் அலுவலகத்தை திறக்க செல்லும் வழக்கறிஞர்களிடம் பார் கவுன்சில் அடையாள அட்டையை காண்பிக்கும்பட்சத்தில் அனுமதிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்

தமிழக அரசு அறிவித்துள்ள முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, தனிமனித இடைவெளி ஆகியவற்றை வழக்கறிஞர்கள் பின்பற்றுவார்கள் என்றும் தலைவர் அமல்ராஜ் உறுதி அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT