கரோனா தொற்றால் உயிரிழந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று ஏற்பட்டது முதல் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது. மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் களப்பணியில் முன்னணிப் படை வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் காவல் பணியில் இருந்த 600-க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் காவல்துறையினரைக் கவலையில் ஆழ்த்தும் விதமாக சென்னை காவல்துறையில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டது.
சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகப் பணியாற்றியவர் பாலமுரளி (47). கரோனா பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 5-ம் தேதி தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் 2 நாளில் காய்ச்சல் அதிகமான நிலையில் கடந்த 7-ம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென இன்று காலை முதல் பாலமுரளியின் உடல் நிலை மோசமானது. சிகிச்சை பலனின்றி இன்று மாலை பாலமுரளி உயிரிழந்தார்.
சென்னை காவல்துறையில் கரோனாவுக்கு முதல் பலியாக ஆய்வாளர் மரணம் அமைந்துள்ளது. அவரது மரணத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பாலமுரளி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
“சென்னை மாவட்டம், மாம்பலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பாலமுரளி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (17.6.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
கரோனா வைரஸ் தொற்று நோய் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளியை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
பாலமுரளி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.