தமிழகம்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளுக்கு ஹோமியோபதி மருந்து: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கி.மகாராஜன்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஹோமியோபதி மருந்து வழங்க மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட ஹோமியோபதி மருத்துவர் நலக் கூட்டமைப்பு தலைவர் பக்ருதீன், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
கரோனா நோய் பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கரோனா பரவல் தொடங்கிய சீனா உள்ளிட்ட பல நாடுகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளை பயன்படுத்த கரோனா தொற்று சரி செய்யப்படுகிறது.

இந்தியாவில் ‘ஆர்செனிக் ஆல்பம் 30 சி’ எனும் ஹோமியோபதி மருந்து கரோனா தொற்று பரவுவதை தடுப்பதும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளுக்கு ஆர்செனிக் ஆல்பம் 30 சி என்ற ஹோமியோபதி மருந்து வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளுக்கு ஆர்செனிக் ஆல்பம் 30 சி என்ற ஹோமியோபதி மருந்து வழங்க மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்டு, மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT