தமிழகம்

கரோனா நோயாளிகளுக்கு அலோபதி, ஆயுஷ் கூட்டு மருத்துவ சிகிச்சை: மதுரை தோப்பூர் மருத்துவமனையில் தொடக்கம்- தென் தமிழகத்தில் முதன்முறை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை தோப்பூர் காசநோய் மருத்துவமனை கரோனா வார்டில் தென் தமிழகத்திலே முதல் முறையாக அலோபதி மருத்துவர்களுடன் ஆயுஷ் மருத்துவர்களும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு நோயாளிகளுக்கு அலோபதி - ஆயுஷ் கூட்டு மருத்துவ சிகிச்சை வழங்குவது தொடங்கியுள்ளது.

அதிக உடல் வெப்பம் (காய்ச்சல்), சுவாசக்கோளாறு மற்றும் இருமல் போன்றவை ‘கரோனா’வின் முக்கிய அறிகுறிகளாக கூறப்படுகின்றன.

ஆனால், தற்போது மேலும் சில அறிகுறிகள் சொல்லப்படுகிறது. அறிகுறி இல்லாமலும் நோயாளிகளுக்கு இந்த தொற்று நோய் கண்டறியப்படுகிறது. அதனால், இந்த நோய் பரவுதைத் தடுக்க முடியாமல் மருத்துவ உலகம் திணறிக் கொண்டிருக்கிறது.

தற்போது வரை இந்த தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயாளிகள் அனுமதிக்கப்படும் ‘கரோனா’ வார்டுகளில் அவரவர் நோய் தொந்தரவுகளுக்கு தகுந்தவாறு அலோபதி மருத்துவக்குழுவினர் சிகிச்சை வழங்குகின்றனர்.

இந்நிலையில் சென்னைக்கு அடுத்து தென் தமிழகத்திலே முதல் முறையாக மதுரை அரசு மருத்துவமனை கட்டுப்பாட்டில் செயல்படும் தோப்பூர் காசநோய் மருத்துவமனை ‘கரோனா’ வார்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அலோபதி மருத்துவர்களுடன் ஆயுஷ் மருத்துவர்களும் (சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் ஹோமியோபதி) பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் 49 ஆயுஷ் மருத்துவர்கள் உள்ளனர். அவர்களில் 36 மருத்துவர்களுக்கு தோப்பூர் ‘கரோனா’ வார்டில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காலை 8 மணி முதல் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும், 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரையும் சுழற்சி முறையில் ஆயுஷ் மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று மாலை வரை இதுவரை சிகிச்சையில் இருந்த நோயாளிகள் 440 குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். தற்போது 152 நோயாளிகள் சிகிச்சைப்பெறுகின்றனர். இவர்களில் 20 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டுப்பாட்டில் உள்ள தோப்பூர் காசநோய் மருத்துவமனை ‘கரோனா’ வார்டிலும் சிகிச்சைப்பெறுகின்றனர்.

இந்த வார்டில் நோயாளிகளுக்கு ஏற்படும் சுவாசப்பிரச்சனைகள், காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றுக்கு அலோபதி மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவார்கள். அவர்களுடன் ஆயுஷ் மருத்துவர் சுழற்சி முறையில் ஒருவர் பணியில் உள்ளனர். அவர்கள் பரிந்துரைக்கும் கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது, ’’ என்றார்.

‘கரோனா’ வார்டில் பணிபுரியும் ஆயுஷ் மருத்துவர்கள் கூறுகையில், ‘‘பக்கவிளைவுகளற்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் பக்கம் மக்கள் பார்வை திரும்பியிருக்கிறது. அதனால், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் ஹோமியோபதி ஆகிய 5 மருத்துவ முறைகள் வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன.

இந்த ஐந்து மருத்துவமும் சேர்ந்து ஆயுஷ் மருத்துவம் என்று அழைக்கப்படுகிறது. அலோபதி மருத்துவத்துத்துடன் கரோனா நோயாளிகளுக்கு நாங்களும் சிகிச்சையும், ஆலோசனையும் வழங்குகிறோம். யோகாவும் சொல்லிக் கொடுக்கிறோம். அது நல்ல பயனை தருவதாக நோயாளிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர், ’’ என்றார்.

SCROLL FOR NEXT