திருச்சி சரக டி.ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் 
தமிழகம்

காவிரியில் மூழ்கி 3 ஆண்டுகளில் 61 பேர் உயிரிழப்பு: திருச்சி, கரூரில் 43 இடங்கள் மிகவும் ஆபத்தானவை; பொதுமக்களுக்கு திருச்சி சரக டிஐஜி எச்சரிக்கை

அ.வேலுச்சாமி

காவிரியில் மூழ்கி கடந்த 3 ஆண்டுகளில் 61 பேர் உயிரிழந்துள்ள நிலையில், திருச்சி, கரூர் மாவட்டங்களில் 43 இடங்கள் மிகவும் ஆபத்தானவை என்று திருச்சி சரக டிஐஜி வே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஜூன் 17) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 18 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நீர் திருச்சி சரகத்தில் திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிக பரப்பில் பாய்ந்து செல்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் 15.6.2020 வரையிலான 3 ஆண்டுகளில் இப்பகுதிகளில் காவிரி ஆற்றில் மூழ்கி 61 பேர் இறந்துள்ளனர். இவர்களில் திருச்சி மாவட்டத்தில் 33 ஆண்கள், 5 பெண்கள், 10 சிறுவர்கள், கரூர் மாவட்டத்தில் 24 ஆண்கள், 3 பெண்கள், 1 சிறுவர் அடங்குவர்.

நடப்பாண்டில் இதுபோன்ற உயிரிழப்புகளைத தவிர்ப்பதற்காக காவிரி ஆற்றில் மிகவும் ஆபத்தான பகுதிகள் குறித்துக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், கரூர் மாவட்டத்தில் வாங்கல் - மோகனூர் ரயில்வே பாலம், நெரூர், திருமுக்கூடலூர், அட்சமபுரம், அரங்கநாதன்பேட்டை, கடம்பன்குறிச்சி மேட்டுப்பாளையம், செவ்வந்திபாளையம், மாயனூர் கதவணை பாலம் அருகில், மாயனூர் காவிரி ஆறு கட்டளை வாய்க்கால் ஆகிய 9 இடங்களும், திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு நடுக்கரை, பழூர், கம்பரசம்பேட்டை தடுப்பணை, முக்கொம்பு காவிரி நடுக்கரை, ஆமூர், குணசீலம், வேங்கூர் பூசைத்துறை, ஒட்டக்குடி வடக்கு, பனையபுரம், உத்தமர்சீலி, முசிறி சாந்தபாளையம், பரிசல்துறை, அக்ரஹாரம், உமையாள்புரம், செவந்திலிங்கபுரம், அய்யம்பாளையம், ஏவூர், கீழக்கரைக்காடு, திருநாராயணபுரம், பதனித்தோப்பு, வரதராஜபுரம், ஸ்ரீனிவாசநல்லூர், கொடியம்பாளையம், மணமேடு, கொக்குவேட்டையன் கொயில், உன்னியூர், ஸ்ரீராமசமுத்திரம், சின்னபள்ளிபாளையம், பெரியபள்ளிபாளையம், சீலைப்பிள்ளையார்புதூர், காடுவெட்டி, நத்தம், காரைக்காடு, எம்.புத்தூர் ஆகிய 34 இடங்களும் என மொத்தம் 43 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்த இடங்களில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினருடன் இணைந்து எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒலிப்பெருக்கி மூலமாகவும், விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தியும் பொதுமக்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கரையோரக் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்களுடன் இணைந்து பகல், இரவு நேரங்களில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

ஒருவேளை யாரேனும் நீரில் மூழ்கினால், அவர்களை அந்தப் பகுதியிலுள்ள நீச்சல் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மூலம் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு உட்கோட்ட அளவிலும் ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் தலா 10 பேரைக் கொண்ட பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற காவலர்கள் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT