தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் மருத்துவப் பணியாளர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்காததால் ஜூன் 25-ம் தேதி ஆட்சியர் அலுவலகங்களில் தஞ்சமடைய முடிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக பல்நோக்கு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் துப்புரவு பணி, நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கல், காயங்களுக்கு மருந்து கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் பல்நோக்கு பணியாளர்கள் பணிப்பளு அதிகரித்துள்ளது. சோதனைச் சாவடிகளில் கரோனா தடுப்பு பணி, ரத்தம், சளி மாதிரிகளை பரிசோதனை மையங்களுக்கு எடுத்து செல்லுதல் போன்ற கூடுதல் பணியையும் செய்து வருகினறனர்.
வேலைப் பளு அதிகரித்தநிலையிலும் அவர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பி.குமார் கூறியதாவது: பெரும்பாலானோர் 8 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிகின்றனர். அனைவரையும் பணி நிரந்தம் செய்வதாக ஓராண்டுக்கு முன்பு அரசு அறிவித்தது.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கரோனா சமயத்தில் 3 மாதங்களாக ஊதியம் வழங்காததால் அவர்கள் கடன் வாங்கி செலவு செய்யும் நிலை உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முயற்சியால் ஒரு மாதத்திற்கு ஊதியம் கிடைத்துள்ளது. இதையடுத்து உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்நோக்கு பணியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் தமிழகம் முழுவதும் ஜூன் 25-ம் தேதி மாலை 6 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தஞ்சம் அடைய முடிவு செய்துள்ளனர், என்று கூறினார்.