'நாட்டிற்காக உயிர்நீத்த மகனால் பெருமைப்படுகிறேன்' என லடாக்கில் சீன ராணுவத்தினர் தாக்கி வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் தந்தை பெருமிதத்துடன் கூறினார்.
கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் தமிழக வீரர் பழனி, தெலுங்கானாவைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு, ஜார்gகண்டைச் சேர்ந்த வீரர் ஓஜா உள்ளிட்ட 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.
வீர மரணம் அடைந்த ராணுவ ஹவில்தார் பழனி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் கடுக்கலூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை காளிமுத்து (65), தாய் லோகம்பாள் (55) ஆகியோர் சொந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
பழனியின் மனைவி வானதிதேவி, மகன் பிரசன்னா(10), மகள் திவ்யா (8) ஆகியோர், ராமநாதபுரம் அருகே கழுகூரணி கஜினி நகரில் வசித்து வருகின்றனர்.
பழனியின் சகோதரரான இதயக்கனி (27), இந்திய ராணுவத்தில் ஹவில்தார் (கிளர்க்) பதவியில் ராஜஸ்தானில் பணியாற்றி வருகிறார். அண்ணனின் மரணத்தைத் தொடர்ந்து அவர் நேற்று சொந்த ஊருக்க வந்தார்.
வீரர் பழனி மரணத்தைத் தொடர்ந்து அவரது உறவினர்கள், கிராமத்தினர், சுற்றுவட்டார கிராம மக்கள் நேற்று முன்தினம் முதல் கடுக்கலூருக்கு வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய வண்ணம் உள்ளனர்.
ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், இன்று பழனியின் பெற்றோர், அவரது மனைவி உள்ளிட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தமிழக முதல்வர் அறிவித்தபடி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும், ரூ. 20 லட்சம் நிதியும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா உள்ளிட்ட அதிகாரிகளும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.
வீரர் பழனியின் தந்தை காளிமுத்து கூறும்போது, மகன் பழனி தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரத்தில் விடுதியில் தங்கி 6-ம் முதல் பிளஸ் 2 வரை படித்தார்.
பள்ளிப் படிப்பின்போது விளையாட்டில் ஆர்வமிக்க அவர் , ராணுவத்தில் சேர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தார். அதன்படி பிளஸ் 2 முடித்ததும் ராணுவத்தில் சேர்ந்தார். 22 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு நாட்டிற்காக வீரமரணம் அடைந்தது பெருமையாக உள்ளது.
பழனியின் தூண்டுதல் மற்றும் அறிவுரைப்படி 2வது மகன் இதயக்கனியும் ராணுவத்தில் சேர்ந்து, கடந்த 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இரு மகன்களையும் நாட்டிற்காக சேவை செய்ய ராணுவத்தில் சேர்த்ததில் பெருமைப்படுகிறேன். நாட்டிற்காக உயிர்நீத்த எனது மகனின் சேவையைப் பாராட்டி அரசே நினைவு மண்டபம் கட்டி பெருமைப்படுத்த வேண்டும். இதுகுறித்து ஆட்சியரிடமும் கோரியுள்ளேன் என்றார்.
வீரர் பழனியின் தம்பி இதயக்கனி கூறியதாவது, நான் ராணுவத்தில் சேர அண்ணன் உந்துதலாக இருந்தார். அவர் நாட்டிற்காக உயிர்நீத்தது பெருமையாக உள்ளது. நானும், அண்ணனும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சந்திக்கவில்லை. ஆனால் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம். கடைசியாக ஜூன் 3-ம் தேதி போனில் பேசினேன். அதன்பின் எல்லையில் பதற்றம் நிலவியதால் பேச முடியவில்லை என்றார்.
வீரர் பழனி ஜனவரியில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துவிட்டுச் சென்றுள்ளார். இதயக்கனி விடுமுறையில் மார்ச்சில் சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். அதனையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கையால் அவரால் மீண்டும் பணிக்குச் செல்ல முடியவில்லை.
கடந்த 8 நாட்களுக்கு முன்பு தான் இதயக்கனி பணி நிமித்தமாக ராஜஸ்தான் சென்றுள்ளார். கரோனா தடுப்பு நடவடிக்கையாக அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் அண்ணனின் இறப்புச் செய்தி கிடைத்ததும், அவரது நல்லடக்கம் உள்ளிட்டவற்றை செய்வதற்காக சொந்த ஊருக்கு வந்துவிட்டார்.
உடல் அடக்கம்
· வீரர் பழனியின் உடல் நேற்றிரவு விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு சொந்த கிராமமான கடுக்கலூருக்கு கொண்டு வரப்படும் என ராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
· அவரது உடல் கடுக்கலூரில் பழனியின் வீட்டின் அருகே கிராமத்தின் முக்கியச் சாலையில் பழனியின் குடும்பத்துக் சொந்தமான இடத்தில் இன்று காலை (ஜூன் 18) ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.
· பழனியின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல பெங்களூரிலிருந்து ராணுவப்படை பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் நேற்று வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் பழனியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் வீரர் பழனியின் கழுகூரணி வீட்டுப்பகுதியில் வசிக்கும் ராணுவ சுபைதார் முருகன், சக ராணுவ வீரர் இறந்தை அறிந்து ராணுவச் சீருடையுடன் வந்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
· மேலும் திமுக மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்ச முத்துராமலிங்கம் தலைமையில் மாவட்ட ஊராட்சி தலைவர் உ.திசைவீரன் உள்ளிட்ட திமுகவினர் திரளாக வந்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்தினரிடம் திமுக சார்பில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ரூ. 2 லட்சம் நிதியை வழங்கினார். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன் நேரிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் போனிலும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.