கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் யோகப்பயிற்சி சிறந்த முன் தடுப்பு நடவடிக்கையாக உள்ளதாக யோகா மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தியாவில் யோகாவுக்கு சுமார் 5,000 ஆண்டுகால பாரம்பரியம் இருக்கின்றது. உடல் மற்றும் மனம் இரண்டின் ஒருங்கிணைப்புக்கும் ஆரோக்கியத்தைப் பேணவும் யோகா உதவுகின்றது.
புதுச்சேரி அரசு சார்பில் வாழ்வியல் முறை மாற்று சுகாதார மையம் உள்ளது. அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் தற்போதும் பலரும் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
இங்குள்ள யோகா மருத்துவர் மகேஸ்வரன் கூறுகையில், "யோகா மருத்துவ சிகிச்சையாகவும் பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக நாட்பட்ட தொற்றா நோய்களுக்கு யோகாசனம் நல்ல பலன்களை அளிக்கிறது. அரசின் இந்த யோகா பயிற்சி மையத்துக்கு தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து கொண்டிருந்தனர்.
கரோனா ஊரடங்கால் குறைவான அளவிலேயே நோயாளிகள் யோகா சிகிச்சைக்கு தற்போது இங்கு வருகின்றனர். நீரிழிவு, முதுகுத்தண்டுவடத் தேய்வு, மாதவிடாய் மற்றும் வயதானவர்களின் மூட்டுப் பிரச்சினை ஆகிய 4 உடல்நலக் கோளாறுகளுக்காகவே நிறைய நபர்கள் யோகப் பயிற்சிக்காக இங்கு வருகின்றனர்.
மருத்துவர் மகேஸ்வரன்
கரோனா பெருந்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு நம் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க வேண்டும். இன்றைய வாழ்க்கை முறை நமக்கு மன அழுத்தத்தை உண்டாக்குவதாகவே உள்ளது. மன அழுத்தம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கிறது. எனவே, கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் யோகப்பயிற்சி சிறந்த முன் தடுப்பு நடவடிக்கை ஆகும்.
யோகாசனம், பிராணயாமம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் ஆகியன மூச்சுக்குழாய் அடைப்பை நீக்கி தசைகளை வலுவாக்குவதோடு கிருமி வளரும் சூழலையும் குறைக்கின்றன. எனவே இன்றைய காலகட்டத்தில் கரோனா வைரஸுக்கு எதிரான ஒரு போராட்ட உத்தியாக அனைவரும் யோகப் பயிற்சியைக் கைக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுக்கு சிகிச்சை பெற வந்திருந்த 66 வயதான ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பூங்குழலியிடம் பேசும்போது, "ஆஸ்துமா பிரச்சினைக்காக இங்கு யோக சிகிச்சைக்கு வந்தேன். யோகப் பயிற்சிகளை மேற்கொண்ட பிறகு ஆஸ்துமா குணமானது. பணியில் இருக்கும்போதே எனக்குத் தூக்கமின்மை பிரச்சினை இருந்தது. யோக முத்ரா பயிற்சியை மேற்கொண்டதால் இப்பொழுது நிம்மதியாகத் தூங்க முடிகிறது" என்று தெரிவித்தார்.
61 வயதான சுந்தரராஜ பாஸ்கர் யோகா சிகிச்சைக்குப் பிறகு கூறுகையில், "நுரையீரலில் நீர்க்கட்டி இருந்தது. அவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று தனியார் மருத்துவமனையில் கூறினர். அரசு யோகா பயிற்சி மையம் குறித்து தெரிந்து கொண்டு இங்கு டிசம்பர் 2019 முதல் யோகா சிகிச்சை எடுத்து வந்த நிலையில் மார்ச் 2020-ல் அதே தனியார் மருத்துவமனைக்கு மீண்டும் பரிசோதனைக்குச் சென்றேன். அங்கு பரிசோதித்துப் பார்த்த மருத்துவர் நீர்க்கட்டிகள் கரைந்து விட்டதாகக் கூறியது மகிழ்ச்சி தந்தது" என்று கூறினார்.
70 வயதான எஸ்.ராமகிருஷ்ணன் கூறுகையில், "சளி பிரச்சினைக்காக யோகப் பயிற்சிக்கு வந்தேன். தற்போது இயல்பு நிலையில் உள்ளேன். முக்கியமாக யோகா பயிற்சிக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பி மன உளைச்சல் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மருத்துவர் ஸ்ரீராமுலு
புதுச்சேரி அரசின் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தின் இயக்குநர் மருத்துவர் ஸ்ரீராமுலு கூறுகையில், "உடல் ஆரோக்கியத்தையும் மன வலிமையையும் தருகின்ற யோகா உடல்-மனம்-ஆன்மா ஆகிய மூன்றின் ஒன்றிணைவுக்கு உதவுகின்றது. ஒருசில அறுவை சிகிச்சைகளை இளம் வயதில் இருந்தே யோகா செய்து வருவதன் மூலம் தவிர்த்துவிட முடியும். இதை நான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தே கூறுகிறேன்" என்று தெரிவித்தார்.
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி அலுவலரும் நிர்வாக அதிகாரியுமான மருத்துவர் ராஜேந்திரகுமார் கூறுகையில், "தற்போது பொதுமக்கள் பலரும் யோகாசனம் செய்யப் பழகி அதன் பலனைப் பெற்று வருகின்றனர். பலரின் ஆரோக்கியத்திற்குக் காரணமாக யோகா இருக்கிறது என்பது மிகையான கூற்றல்ல. ஜூன் மாதம் 21-ம் தேதி அன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 7 மணி முதல் 7.45 மணி வரை அனைவரும் அவரவர் வீடுகளில் இருந்து கொண்டே குடும்பத்தாருடன் யோகப் பயிற்சியில் ஈடுபடலாம். ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள பொதுவான யோகா நெறிமுறைகள் என்ற வழிகாட்டி அறிவுரைகளைக் கடைப்பிடித்து இந்த யோகப் பயிற்சியை மேற்கொள்ளலாம்" என்று கூறினார்.
மருத்துவர் ராஜேந்திரகுமார்
இந்தியாவின் முன்னெடுப்பால் 21.6.2015 முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகின் அனைத்து நாடுகளும் யோகா தினத்தைக் கொண்டாடி வருகின்றன. ஆறாவது சர்வதேச தினத்தை நாம் வித்தியாசமாகக் கொண்டாட வேண்டிய சூழலுக்குக் கரோனா பெருந்தொற்று நம்மை ஆளாக்கியுள்ளது. பொது இடங்களில் பலர் ஒன்று சேர முடியாத இச்சூழலில் 'வீட்டில் யோகா-குடும்பத்தாருடன் யோகா' என்பதே இந்த ஆண்டின் கொண்டாட்ட முறையாகி உள்ளது. நாமும் யோகாவைத் தவறாமல் கற்கலாமே.