தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள வாளையாறு அணை வழியாக, கோவைக்குள் அத்துமீறி மக்கள் நுழைந்து வருகின்றனர். இதனால் கரோனா வைரஸ் தொற்று ஏற்படுமோ என்று அஞ்சுகின்றனர், எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும், பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
கோவை-பாலக்காடு சாலை வழியாகச் செல்லும் வாகனங்களை வாளையார் சோதனைச்சாவடி அருகே சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள ரயில் பாதை வழியாக கேரளாவில் இருந்து அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கோவைக்குள் நுழையத் தொடங்கினர். இதுகுறித்துத் தகவலறிந்த அதிகாரிகள் வாளையாற்றை ஒட்டியுள்ள ரயில் பாதையையும் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அங்கு வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர், மூட்டை முடிச்சுகளுடன் வாளையாறு அணையில் தண்ணீர் குறைவாக உள்ள, சேறும் சகதியுமிக்க பகுதியில் இறங்கி புதிதாக வழித்தடம் ஏற்படுத்திக் கோவைக்குள் நுழைந்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக- கேரள எல்லைப் பகுதியில் வசிக்கும் கோவை மக்கள் கூறியதாவது:
’’கோவை மாவட்டத்தையொட்டி அமைந்துள்ள தமிழக- கேரள எல்லையில் வாளையாறு அணை உள்ளது. 64 அடி வரை நீரைத் தேக்கி வைக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட, இந்த அணையால் 6,500 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி அளிக்க முடியும். பாசனம் பெறும் நிலப்பரப்பு அனைத்தும் கேரளாவில் உள்ளது.
தமிழக எல்லையில் உள்ள எட்டிமடை, க.க.சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீரும் இதில் தேக்கப்படுகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத புதரில் இந்த அணை மறைந்து காணப்படுகிறது. அணையில் தற்போது தண்ணீரின் அளவு குறைந்து காணப்படுகிறது. சில இடங்களில் சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கிறது. இதைப் பயன்படுத்திக் கடந்த சில நாட்களாக கேரளாவில் இருந்து கோவைக்குள் பொதுமக்கள் அத்துமீறி நுழைந்து வருகின்றனர்.
கேரள எல்லைப் பகுதியில் இருந்து வாளையாறு அணைப் பகுதிக்குச் செல்வதற்கு ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. கேரளாவில் இருந்து வரும் பொதுமக்கள், இங்குள்ள ஆட்டோக்கள் வழியாக வாளையாறு அணையை வந்தடைந்து, அங்குள்ள கரையோரத்தில் இறங்கி அணைக்குள் இறங்கி, க.க.சாவடி பகுதியை அடைகின்றனர்.
பின்னர், அங்கிருந்து பேருந்து மூலம் மதுக்கரை, கோவைப்புதூர் உள்ளிட்ட தாங்கள் செல்ல வேண்டிய கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எளிதாகச் செல்கின்றனர். இதேபோல் கோவை வந்தடையும் சிலர் திருப்பூருக்கும் செல்வதாகத் தகவல் கிடைத்துள்ளது. சிலர் பெற்றோர், மனைவி, குழந்தைகள் என குடும்பத்துடன் வருகின்றனர். இவ்வாறு கோவைக்குள் அத்துமீறி நுழைபவர்களால், கரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, கோவை மாவட்ட நிர்வாகத்தினர், சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இவ்வழியாக கோவைக்குள் பொதுமக்கள் நுழைவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், இவ்வழியாக வரும் பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. அணைக்குள் ஏற்படுத்தியுள்ள வழித்தடத்தையும் உடனடியாக மூட வேண்டும்’’.
இவ்வாறு எல்லைப் பகுதியில் வசிக்கும் கோவை மக்கள் கூறினர்.