தமிழகத்தில் சிறைகளில் கரோனா தொற்று பரவி வருவதால் சிறிய குற்றங்களில் தொடர்புடைய கைதிகள் மற்றும் 10 ஆண்டு தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்கக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த டி.செந்தில் என்ற திலீபன் செந்தில், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
இந்தியாவில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது. சிறை கைதிகளுக்கும் கரோனா தொற்று பரவியுள்ளது.
சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, கடலூர் சிறைகளில் 39 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறைகளில் கரோனா பரவலைத் தடுக்க ஒவ்வொரு மாநிலத்திலும் உள்துறை முதன்மைச் செயலர் தலைமையில் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், சட்டத்துறை முதன்மை செயலர், சிறைத்துறைத் தலைவர் அடங்கிய குழு அமைக்க உச்ச நீதிமன்றம் 23.3.2020-ல் உத்தரவிட்டது.
இந்தக்குழு சிறைகளை கண்காணித்து கரோனா பரவலை தடுக்க கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வது, பரோல் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.
இந்த உத்தரவு அடிப்படையில் தமிழக சிறைகளில் உள்ள சிறிய குற்றங்களில் தொடர்புடைய கைதிகள் மற்றும் ஆஸ்துமா, நீரழிவு, ரத்த அழுத்த பாதிப்புள்ள சிறை கைதிகளையும் விடுதலை செய்யவும், பத்து ஆண்டு சிறைவாசம் முடித்த ஆயுள் தண்டனை கைதிகளுக்கு 2 மாதம் பரோல் விடுமுறை வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு இன்று விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமுருகன் வாதிடுகையில், சிறைகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சிறைத்துறை அலுவலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
அரசு வழக்கறிஞர் சண்முகநாதன் வாதிடுகையில், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்தில் சிறை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து, சிறைக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.