தவறில்லாமல் தேசிய கீதம் பாடிய பின்னரே இளைஞர் ஒருவருக்கு நற்சான்று வழங்கிய புதுச்சேரி காவல்துறையினரின் செயல் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகளில் குடியமர்த்துவது, காவலாளி வேலை, தனியார் வங்கிகளில் வேலை என சகல விஷயங்களுக்கும் வேலைக்கு அமர்த்தும் முன் சம்பந்தப்பட்டவர் நல்ல நடத்தை உள்ளவர் என வேலை கொடுப்பவர் அறிந்துகொள்ளவும், குற்றவாளிகளுக்கு வேலை கொடுக்காமல் தவிர்க்கவும் விசாரிக்கும் முறை உண்டு.
இதற்காக காவலர் நற்சான்றிதழை தங்களது சான்றிதழுடன் விண்ணப்பதாரர்கள் இணைக்க வேண்டும் என்கிற நடைமுறை உள்ளது. இதன் நோக்கம் சம்பந்தப்பட்டவர் குற்றப் பின்னணி உள்ளவர் அல்ல என்பதேயாகும். இதற்காக சம்பந்தப்பட்டவர் அருகிலுள்ள காவல் நிலையம் சென்று விண்ணப்பித்தால் காவல்துறையினர் அவர்களைப் பற்றி விசாரித்து நற்சான்றிதழ் ஒன்றைத் தருவார்கள்.
இந்நிலையில், தவறில்லாமல் தேசிய கீதம் பாடச் சொல்லி இளைஞர் ஒருவருக்கு நற்சான்று வழங்கிய சம்பவம் புதுச்சேரியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை சாமிப்பிள்ளைத்தோட்டம் லெனின் நகரைச் சேர்ந்தவர் 22 வயது இளைஞர். பி.காம் முடித்துள்ள இவருக்கு தற்போது புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது.
அதற்காக அவரிடம் நற்சான்றிதழ் கேட்டுள்ளனர். இதனையடுத்து, அந்த இளைஞர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தை அணுகி தன் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்ற நற்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று நேற்று (ஜூன் 16) விண்ணப்பித்துள்ளார். அப்போது காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணன், உதவி ஆய்வாளர் கீர்த்தி ஆகியோர் தேசிய கீதத்தை ஒரு முறை தவறில்லாமல் பாடினால் நற்சான்று கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அந்த இளைஞர் சரியாகப் பாடாததால் மறுநாள் வந்து தேசிய கீதத்தைப் பாடிவிட்டுச் சான்றிதழ் பெற்றுச் செல்லுமாறு கூறி அனுப்பியுள்ளனர். இதையடுத்து அந்த இளைஞர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மீண்டும் இன்று (ஜூன் 17) காவல் நிலையம் சென்ற அந்த இளைஞர் தவறில்லாமல் தேசிய கீதத்தைப் பாடிக் காட்டினார். மகிழ்ச்சியடைந்த போலீஸார் அந்த இளைஞருக்கு நற்சான்றிதழ் வழங்கி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, "தனியார் வங்கியில் வேலைக்குச் செல்ல நற்சான்று கேட்டு அந்த இளைஞர் வந்தார். ஒரு முறை தேசிய கீதம் பாட வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அவருக்கு இரண்டு வரிகள் கூட பாடத் தெரியவில்லை. இதனால் திருப்பி அனுப்பிவிட்டோம். இன்று வந்த அவர் சரியாகப் பாடியதை அடுத்து அவருக்குச் சான்றிதழ் கொடுத்தோம்" என்று தெரிவித்தனர்.
தவறில்லாமல் தேசிய கீதம் பாடச் சொல்லி நற்சான்று வழங்கிய புதுச்சேரி காவல்துறையினரின் இச்செயலை பலரும் வரவேற்றுள்ளதோடு, பாராட்டி வருகின்றனர்.