ஓசூர் ராம்நாயக்கன் ஏரியில் இருந்து அகற்றப்பட்ட மதகு திறப்பான் கல்தூண்களை மீண்டும் ஏரியின் நுழைவு வாயிலில் நிறுவி வரலாற்று நினைவுச்சின்னப் பூங்கா அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த 16-வது நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் கீழ் பாகலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சிற்றரசரான ராமாநாயக் ஆட்சி புரிந்து வந்தார். அக்காலகட்டத்தில் விஜயநகரப் பேரரசு மீது முஸ்லிம்கள் படையெடுத்து வந்தனர்.
அப்போது நடைபெற்ற போரில் வெற்றி கொள்ளும் வகையில் விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசர்களுக்குப் படையுடன் புறப்பட்டுவர அழைப்பு விடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பாகலூர் சிற்றரசர் ராமாநாயக் தனது பெரும் படையுடன் விஜய நகரம் சென்று போரில் பங்கேற்றார். அந்தப் போரில் விஜயநகரப் பேரரசு வெற்றி பெற்றது.
அப்போது இந்த வெற்றிக்குப் பெரும் பங்காற்றிய பாகலூர் சிற்றரசர் ராமாநாயக் பாராட்டப்பட்டு வெகுமதிகளுடன் பாகலூர் திரும்பினார். அதன் நினைவாக அவரது மகன் சந்திரசேகர நாயக், பாகலூர் சிற்றரசுக்கு உட்பட்ட ஓசூர் பகுதியில் 16-வது நூற்றாண்டில் ராமநாயக்கன் ஏரியை உருவாக்கி, ஏரியின் ஒரு பகுதியில் மதகு திறப்பான் அமைத்து அதைச்சுற்றிலும் அழகிய சிற்பக்கலையுடன் கூடிய 4 கல்தூண்களை நிறுவினார். இந்தக் கல்தூண்கள் பல நூற்றாண்டுகளாக ஓசூரின் நினைவுச்சின்னமாக விளங்கி வந்தன.
இந்நிலையில் கடந்த ஆண்டு ராம்நாயக்கன் ஏரிக்கரையில் தளி சாலை சந்திப்பு முதல் உதவி ஆட்சியர் அலுவலகம் வரை 0.70 கி.மீ.தொலைவுக்கு ரூ.8.99 கோடி மதிப்பில் இருவழிச்சாலை மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டது. இந்தப் பணிகளின்போது ஏரிக்கரையில் இருந்த 4 கல்தூண்கள் கொண்ட மதகு திறப்பான் அகற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓசூர் முன்னாள் எம்எல்ஏவும், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்தின் தலைவருமான கே.ஏ.மனோகரன், ராம்நாயக்கன் ஏரியின் மதகு திறப்பான் கல்தூண்களை வரலாற்று நினைவுச்சின்னமாகப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
அதனைத்தொடர்ந்து ஓசூர் உதவி ஆட்சியர் அலுவலகம் எதிரில், ராம்நாயக்கன் ஏரி நுழைவு வாயிலில், ஏரியிலிருந்து அகற்றப்பட்ட தலா 5 டன் எடையுள்ள 4 கல்தூண்களும் மீண்டும் நிறுவப்பட்டன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத் தலைவர் கே.ஏ.மனோகரன் கூறும்போது, ''தமிழ்நாட்டிலேயே அதிகமான கல்வெட்டுகள் மற்றும் நடுகல் உள்ளிட்ட வரலாற்று நினைவுச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் திகழ்கிறது.
16-வது நூற்றாண்டில் ராம்நாயக்கன் எரியில் அமைக்கப்பட்ட மதகு திறப்பான் கல்தூண்களை அழிந்து போகாமல் எதிர்காலச் சந்ததியினரும் கண்டு வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ளும் வகையில் ராம்நாயக்கன் ஏரி நுழைவு வாயிலில் 4 கல்தூண்களும் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற புதுக்கோட்டை சிற்பி திருமுருகன் ஆலோசனைப்படி இப்பணிகள் நடந்து வருகின்றன. இந்தக் கல்தூண்களைச் சுற்றிலும் அழகிய பூங்கா அமைத்துப் பராமரிக்கப்படும்'' என்றார்.