பெரும்பிடுகு முத்தரையர், தியாகராஜ பாகவதர், சர்.ஏ.டி பன்னீர்செல்வம் ஆகியோருக்குத் திருச்சியில் மணிமண்டபம் கட்டுவதற்காக முதல்வர் பழனிசாமி நேற்று காணொலி வழியாக அடிக்கல் நாட்டினார். பெரும்பிடுகு முத்தரையரும், தியாகராஜ பாகவதரும் திருச்சியை அடிப்படையாகக் கொண்டவர்கள். அவர்களுக்குத் திருச்சியில் மணிமண்டபம் அமைப்பது பொருத்தமாக இருக்கும். ஆனால் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் திருவாரூரைச் சேர்ந்தவர்.
திராவிட இயக்கங்களுக்கு முன்னோடியான நீதிக்கட்சியின் முக்கியத் தலைவராகத் திகழ்ந்தவர். அவருக்குத் திருச்சியைவிடத் திருவாரூரில் மணிமண்டபம் அமைப்பது சாலப்பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள் வரலாறு தெரிந்தவர்கள்.
திருவாரூர் அருகேயுள்ள பெரும்பண்ணையூரில், 1888-ம் ஆண்டு ஜூன் முதல் தேதியில் பிறந்தவர் ஏ.டி.பன்னீர்செல்வம். இங்கிலாந்தில் உள்ள, கேம்பிரிட்ஜ் பல்கலையில், 'பாரிஸ்டர்' பட்டம் பெற்றவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்திருந்தவர். 1916-ல், நீதிக்கட்சி தொடங்கப்பட்டபோது, அதில் இணைந்து செயல்படத் தொடங்கினார். தஞ்சை நகராட்சி தலைவர், மற்றும் ஜில்லா போர்டு தலைவராகப் பதவி வகித்தார். படிப்படியாக உயர்ந்து 1930 - 1939 வரை, சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகவும், நிதி மற்றும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
1930-ல், லண்டனில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற பெருமைக்குரியவர். இரண்டாம் உலகப்போரின்போது, ஆங்கில அரசின் போர்க்கால அமைச்சரவைக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார். இந்தப் பதவி அளிக்கப்பட்ட ஒரே இந்தியர் இவர்தான். இவரின் திறமையை மதித்து ஆங்கில அரசு, இவருக்கு, 'ராவ் பகதூர், சர்' ஆகிய பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தது. இவருக்கு ஆங்கிலேயரிடம் இருந்த செல்வாக்கை வைத்துத்தான் ‘ஏ.டி. பன்னீர்செல்வம் லண்டன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் திராவிட நாட்டை அடைந்துவிடலாம்’ எனப் பெரும் நம்பிக்கையில் இருந்தனர் நீதிக்கட்சித் தலைவர்கள். அதற்கான முயற்சியில் இருந்தபோதுதான் 1940 ஆம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி, ஓமனில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார் பன்னீர்செல்வம்.
இவரின் அருமை பெருமைகளை உணர்ந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மாவட்டங்களுக்குத் தலைவர்கள் பெயர் சூட்டியபோது, திருவாரூர் மாவட்டத்துக்கு இவரது பெயரை சூட்டினார். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டியிருக்கிறார். இந்த நிலையில் ஏ.டி.பன்னீர்செல்வம் மணிமண்டபத்தைத் திருவாரூரில் அமைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய திருவாரூர் மாவட்டத் திமுக செயலாளரும் திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கலைவாணன், “சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தின் அருமை இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? நீதிக்கட்சியின் வரலாறும், அதில் அவருடைய பங்கும் தெரிந்திருந்தால் உரிய மரியாதை அளித்திருப்பார்கள். திருவாரூர் மண்ணின் மைந்தருக்கு யாராவது திருச்சியில் போய் மணிமண்டபம் கட்டுவார்களா? ஆனாலும் இவர்கள் கட்டுகிறார்கள் என்றால் அது திருவாரூர் மண்ணின் மீது இருக்கிற வெறுப்புதான் காரணம்.
கலைஞர் இறந்த பிறகும் கூட திருவாரூர் மண் அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவே இருக்கிறது. அதனால் இந்தமண்ணைப் புறக்கணிப்பதில் அவர்களுக்கு ஒரு குரூர சந்தோஷம் ஏற்படுகிறது. அதனால்தான் திருவாரூரில் கட்டாமல் திருச்சியில் கட்டப் போகிறார்கள். இந்த முடிவைக் கைவிட்டு தங்கள் வெறுப்புணர்ச்சியை மூட்டைகட்டி வைத்துவிட்டு, திராவிட இயக்க முன்னோடியான சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்துக்குத் திருவாரூரில் மணிமண்டபம் கட்ட வேண்டும்” என்றார்.