தமிழகம்

உள்துறை மற்றும் நிதித் துறை சார்பில் ரூ.26.72 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள்- முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

உள்துறை மற்றும் நிதித் துறை சார்பில் ரூ.26 கோடியே 72 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உள்துறை சார்பில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ரூ.1 கோடியே 43 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள காவல் நிலைய கட்டிடம், திருப்பூர் மாநகரில் ரூ.59 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு, சென்னை- வளசரவாக்கம், விருதுநகர்- திருத்தங்கல், சிவகங்கை, திருச்சி- துறையூர், கோவை- கருமத் தம்பட்டி, கடலூர்- நெய்வேலி, தேனி, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் ரூ.11 கோடியே 59 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 17 காவலர் குடியிருப்புகள், 5 காவல் நிலையங்கள், 5 காவல்துறை கட்டிடங்கள் மற்றும் சென்னை- தண்டையார்பேட்டையில் தீயணைப்புத் துறை கட்டிடம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.

கருவூல கட்டிடங்கள்

நிதித் துறை சார்பில் கோவை- அன்னூர், பெரம்பலூர்- ஆலத்தூர், திருவண்ணாமலை- கலசப்பாக்கம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் ரூ.3 கோடியே 13 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4 சார் கருவூல அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், சென்னை- நந்தனம் அம்மா வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித் துறை அலுவலக வளாகத்தில் ரூ.10 கோடியே 98 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் தளங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலர் கே.சண்முகம், நிதித் துறைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி ஜே.கே.திரிபாதி, தீய ணைப்புத் துறை இயக்குநர் சி.சைலேந்திரபாபு, கருவூல கணக்குத் துறை ஆணையர் சி.சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT