தமிழகம்

சாதாரண காய்ச்சல் போன்றதுதான்; கரோனாவை தைரியமாக எதிர்கொள்ளலாம்- நம்பிக்கையூட்டும் குணமடைந்த இளைஞர்

செய்திப்பிரிவு

சாதாரண காய்ச்சலை போன்றதுதான் கரோனாவும். பயப்படாமல் தைரியமாக எதிர்க்கொள்ள வேண்டும் என்று குணமடைந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாதொற்றால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, தொற்றில் இருந்து இதுவரை 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவர் தன்னுடைய அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு படுக்கை காலியாக இல்லாததால், பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சென்றோம். அங்கும் படுக்கை இல்லை. இதையடுத்து, சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில் அனுமதித்தனர். முதலில் எக்ஸ்ரே எடுத்தனர். உடல்நிலை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனக்கு காய்ச்சல், இருமல், உடல் வலி, மூக்கடைப்பு இருந்ததால் மாத்திரைகளை கொடுத்தனர். தினமும் காலையில் கபசுரக் குடிநீர் கொடுக்கின்றனர். காலை 8 மணிக்கு சாப்பிட உணவு தருகின்றனர்.

ஆக்சிமீட்டர் கருவி கொண்டு ஆக்ஸிஜன் அளவை சோதனை செய்கின்றனர். இது ஒரு சிறந்த முறையாகும். இந்த கருவியை அனைவரும் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். இந்த கருவி மூலம் பரிசோதனை செய்யும்போது உடலில் ஆக்சிஜன் அளவு தெரிந்துவிடும். உடலில் ஆக்சிஜன் அளவு 96 முதல் 99 இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. அதற்கு கீழ் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

பயத்தால்தான் உயிரிழப்பு

கரோனா தொற்றைக் கண்டுயாரும் பயப்பட வேண்டாம். மலேரியா காய்ச்சல் போன்றுசாதாரண காய்ச்சல்தான் இதுவும். கரோனா வந்தால் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். பயத்தின் காரணத்தால்தான் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. நான் கரோனா தொற்றில் இருந்து 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன். விரைவில் முழுவதுமாக குணமடைந்து வீட்டுக்கு சென்றுவிடுவேன். அனைவரும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT