தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பிரம்புப் பொருட்கள் தயாரிப்பு தொழிலுக்கு பெயர் பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பிரம்புப் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதில் இருந்து பிரம்புப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னரும் மூலப்பொருட்கள் கிடைக்காமல் பிரம்புப் பொருட்கள் தயாரிப்பு தொழில் முடங்கியுள்ளது. இதனால், தங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பிரம்புப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறும்போது, “பிரம்புகளைப் பயன்படுத்தி நாற்காலி, மேஜை, கட்டில், ஊஞ்சல், அழகுப் பொருட்கள் உட்பட பல்வேறு வகையான பொருட்களை தயாரித்து வருகிறோம். செங்கோட்டை பகுதியில் தயாராகும் பிரம்புப் பொருட்களை தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
அசாம், நாகலாந்து பகுதிகளில் இருந்து பிரம்பு, நார்கள் வரும். பிரம்புகளை எண்ணிக்கை அடிப்படையிலும், எடை அடிப்படையிலும் வாங்குவோம்.
ஒரு கிலோ பிரம்பு சுமார் 250 ரூபாய் வரையும், நார் 700 ரூபாய் வரையும் கிடைக்கும். கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதில் இருந்து பிரம்புகள், அவற்றை கட்டுவதற்கான பிரம்பு நார்கள் போன்றவை கிடைக்கவில்லை.மூலப்பொருட்கள் கிடைக்காமல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 ரூபாய் வரை பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழில் மூலம் வருமானம் கிடைக்கும்.
நிழலில் அமர்ந்தே பல ஆண்டு காலமாக பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழிலை மட்டுமே செய்து வந்ததால் மாற்று வேலைக்கும் செல்ல முடியவில்லை. இதனால், குடும்பம் நடத்த மிகவும் கஷ்டமாக உள்ளது. எங்களுக்காக நலவாரியம் இல்லை. எனவே அரசின் நலவாரிய திட்ட பயன்கள் கிடைக்கவில்லை. ஏழ்மை நிலையில் உள்ள பிரம்புப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றனர்.