கடந்த ஒரு வாரமாக ‘கரோனா’ பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில் மதுரையில் இந்த தொற்று நோய் சமூகப் பரவலாகிவிட்டதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அய்யலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ‘கரோனா’ பாதிப்பு வேகம் அதிகமாக உள்ளது.
அதனால், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து மக்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
மதுரையில் அதிகப்பட்சமாக நேற்று வரை சென்னையிலிருந்து 10 ஆயிரம் பேர் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இ-பாஸ் பெறாமலும் போலி இ-பாஸ் பெற்றும் மதுரைக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதுதான் சுகாதாரத்துறையினர் ஒவ்வொருவராக அடையாளம் கண்டு பரிசோதனை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர்கள், அதற்கு முன்பே ஊருக்குள் சுற்றத்தொடங்கிவிட்டனர்.
முன்புபோல், தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. அதனால், மதுரைக்கு அருகே பரவை காய்கறி மார்க்கெட்டில் ஒரே நாளில் 11 பேருக்கு ‘கரோனா’ பாதிப்பு ஏற்பட்டது.
மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 2 பேர், மாநகராட்சி பெண் இளநிலை உதவியாளர் ஒருவர், சுகாதாரப்பணியாளர்கள் பலர் என பொதுமக்கள் மட்டுமில்லாது ‘கரோனா’ தடுப்பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களும் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ‘கரோனா’ தற்போது வெவ்வேறு வடிவங்களில் அறிகுறி காட்டுகிறது. மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நோயாளிகளுக்கு, அவரவர்களுக்கு வரும் தொந்தரவுகளுக்கு மட்டுமே மருந்து மாத்திரைகளை மருத்துவர்கள் வழங்கி கொண்டிருக்கின்றனர். அது சிலருக்கு பலனளிக்காமல் இறக்கின்றனர்.
ஆனால், இறப்புகளும், பாதிப்புகளும் பல வகைகளில் மறைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரையில் ‘கரோனா’ பாதிப்பு அதிகளவு இருப்பதாகவும், ஆனால், பரிசோதனை மிக குறைவாகவே நடத்தப்படுவதாலேயே பாதிப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று அதிகப்பட்சமாக ஒரே நாளில் 33 பேருக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த சில நாட்களாக மதுரையில் இரட்டை எண்ணிக்கையிலேயே நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவதால் மதுரையில் இந்த நோய் சமூகப் பரவலாக உருவெடுத்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.
ஆனால், சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்போது சமூக பரவல் ஆகுவில்லை என்கின்றனர். இதற்கிடையில் வரப்போகும் விபரீதம் தெரியாமல் மக்கள் பொதுஇடங்களில் சமூக இடைவெளியைக் கூட பின்பற்றாமல் உலாவுகின்றனர்.
பஸ்கள், ஆட்டோக்களில் வழக்கம்போல் மிக நெருக்கமாக பயணம் செய்கின்றனர். கடைகளில் அருகருகே அமர்ந்து அரட்டை அடிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் வேலையை இழந்ததால் வருமானம் இல்லை. அதனால், அவர்களால் முகக்கவசங்களை கூட விலைக்கு வாங்கி பயன்படுத்த முடியவில்லை.
அதனால், ‘கரோனா’வைத் தடுப்பதாக நினைத்து கைகுட்டையையும், வீட்டில் இருக்கும் துணிகளையும் முகக்கவசமாக பயன்படுத்துகின்றனர். தற்போது நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் மதுரை அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதியில்லாமல் தொப்பூர் காசநோய் மருத்துவமனைக்கு 24 கரோனா நோயாளிகள் வரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே எண்ணிக்கையில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால் படுக்கை வசதி இல்லாமல் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். அதனால், மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறையும் ஒருங்கிணைந்து இந்த நோயை மாவட்டத்தில் கட்டுப்படுத்தவும், நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைக்கவும், கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், சென்னை உள்ளிட்ட பிறமாவட்டங்கள் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்களை விரைவாக அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.