மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அகில இந்திய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கரோனா நிவாரணத் தொகை வழங்கக்கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 70-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கரோனா ஊரடங்கு காலத்தில் புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை ரூ.5 ஆயிரம் மத்திய அரசு வழங்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநில அரசு ரூ. 7500 பேரிடர் நிவாரணமாக வழங்கிட
வேண்டும், சிறு, குறு தொழில் புரிவோருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி ரூ.10 லட்சம் வங்கிகள் மூலம் கடன் வழங்கிட வேண்டும். இனி வரும் 6 மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சீனி, கோதுமை அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதனையொட்டி, நகைக்கடை பஜார் அருகில் அமைந்துள்ள நேதாஜி சிலை அருகில் பகுதிக்குழு செயலாளர் பி.ஜீவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ரா.விஜயராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. பழங்காநத்தம் பகுதிக்குழு சார்பில் புறநகர் மாவட்ட செயலாளர் சி.ராமகிருஷ்ணன் தலைமையில் 13 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதேபோல், அரசரடி பகுதிக்குழு சார்பில் 10 இடங்களிலும், மேலப்பொன்னகரம் பகுதிக்குழு சார்பில் 12 இடங்களிலும், ஜெய்ஹிந்த்புரம் பகுதிக்குழு சார்பில் 7 மையங்களிலும், தெற்குவாசல் பகுதிக்குழு சார்பில் 6 இடங்களிலும், முனிச்சாலை பகுதிக்குழு சார்பில் 7 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.