தமிழகம்

இ பாஸ் இல்லாமல் நுழைய முயன்ற இந்துமக்கள் கட்சித் தலைவர் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தம்: திருப்பி அனுப்பிய திண்டுக்கல் போலீஸார்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டத்திற்குள் இ பாஸ் இல்லாமல் நுழைய முயன்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன்சம்பத்தை போலீஸார் திருப்பி அனுப்பினர்.

பிற மண்டலங்களில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் கடும் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன. இதற்காக திண்டுக்கல்- கரூர் மாவட்ட எல்லைகள், திண்டுக்கல்-திருப்பூர், திண்டுக்கல்-திருச்சி மாவட்ட எல்லைகளில் போலீஸார் சோதனைச்சாவடி அமைத்துள்ளனர்.

அரசின் உரிய இ-பாஸ் வைத்துள்ளவர்கள் மட்டுமே வாகனங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி மாவட்ட எல்லையான தங்கமாபட்டி சோதனைச்சாவடியில் போலி இ-பாஸ் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். வாகனத்தில் வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நேற்று காலை இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன்சம்பத் கரூர் மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு காரில் சென்றார். மாவட்ட எல்லைபகுதிக்கு வந்தார்.

கல்வார்பட்டி சோதனைச்சாவடியில் அவரது வாகனத்தை தடுத்துநிறுத்தி போலீஸார் இ-பாஸ் கேட்டனர். இ-பாஸ் இல்லாததால் அவரை திண்டுக்கல் மாவட்டத்திற்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பிவைத்தனர்.

திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்கள் ஒரே மண்டலத்தில் உள்ளதால் வாகனங்கள் சென்றுவர கட்டுப்பாடு இல்லாதநிலையில் வத்தலகுண்டு அருகே திண்டுக்கல் மாவட்ட போலீஸார் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தேவையின்றி வாகன ஓட்டுனர்களை அலைக்கழிப்பு செய்வது தொடர்கிறது.

SCROLL FOR NEXT