மேட்டூர் அணை நீர் மட்டம் 307 நாட்களுக்குப் பிறகு இன்று 100 அடிக்குக் கீழ் சரிந்துள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். மேட்டூர் அணை நீர் மூலம் 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்ததால், குறிப்பிட்ட காலத்தில் ஜூன் 12-ம் தேதி முதல்வர் பழனிசாமி, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்துவிட்டார்.
கடந்த 9 ஆண்டுகளாக மேட்டூர் அணை நீ்ர மட்டம் 90 அடிக்குக் கீழ் இருந்ததால், குறிப்பிட்ட ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படவில்லை. தற்போது, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்குத் தினமும் 10 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆக்ஸ்ட் 15-ம் தேதியில் இருந்து நேற்று (ஜூன் 15) வரை 307 நாட்கள் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்குக் குறையாமல் இருந்து வந்தது. கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு வரும் நிலையி்ல், இன்று (ஜூன் 16) அணை நீர் மட்டம் 100 அடிக்குக் கீழ் சரிந்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணை நீர் மட்டம் 99.64 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 2,210 கனஅடி வீதம் நீர் வரத்து உள்ளது. அணையின் நீர் இருப்பு 64.37 டிஎம்சியாக உள்ளது. டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அணை நீர் மட்டம் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.