வெளிமாநிலத்தவர்கள் மீது போலீஸார் தடியடி. 
தமிழகம்

திருப்பூரில் இருந்து சென்னைக்குச் சென்ற பேருந்துகள் தடுத்து நிறுத்தம்; அருணாச்சலப் பிரதேச மாநிலத்தவர் மீது போலீஸார் லேசான தடியடி

இரா.கார்த்திகேயன்

திருப்பூரில் இருந்து சென்னைக்குச் சென்ற பேருந்துகளைத் தடுத்து நிறுத்தியதால், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தவர் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.

திருப்பூரில் இருந்து 33 சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்குச் செல்ல பதிவு செய்திருந்த அந்த மாநிலத் தொழிலாளர்களுக்கு, நேற்று (ஜூன் 15) இரவு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சென்னை செல்ல சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதனை அறிந்த மேற்கண்ட மாநிலங்களைச் சேர்ந்த முன்பதிவு செய்யாமல் இருந்த சுமார் 100 பேர், திருப்பூர் மாநகர், சுல்தான்பேட்டை, வீரபாண்டி பகுதிகளில் இருந்து, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்குத் திரண்டு வந்தனர். அப்போது தங்களுக்கும் வாகன ஏற்பாடு செய்து சென்னைக்கு அனுப்பி, அங்கிருந்து அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு ரயிலில் அனுப்பி வைக்கக் கோரினர்.

மேலும், ஏற்கெனவே பதிவு செய்தவர்களை சென்னைக்கு அழைத்துச் செல்ல, தயாராக நின்றிருந்த பேருந்துகளை இவர்கள் தடுத்து நிறுத்தியதால், போலீஸார் அவர்களிடம் பல மணிநேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உடன்பாடு ஏற்படாமல் போனதால் லேசான தடியடி நடத்தினர்.

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்குத் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT