தமிழகம்

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காலத்திலும் எரிபொருள் விலை ஏற்றம் மூலம் ரூ.2.5 லட்சம் கோடி வசூல்; ஜூன் 20-ல் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: முத்தரசன்

செய்திப்பிரிவு

கரோனா நோய் பெருந்தொற்று பரவல் காலத்தில் மக்களுக்கு உணவு தானியம் கொடுத்த வகையில் பெரும் செலவு செய்ததாக பிரச்சாரம் செய்து வரும் மத்திய அரசு, கடந்த மார்ச் மாதம் தொடங்கி இதுவரை ரூபாய் 2.50 லட்சம் கோடியை எரிபொருள் நுகர்வோரின் மடியில் இருந்து சட்டபூர்வமாக எடுத்துக் கொண்டிருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

''கரோனா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புக்காக நாடு முடக்கம் செய்யப்பட்டதில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ நான்கு மாதங்களாக வேலையும், வருமானமும் இழந்து, மறு வாழ்க்கை தொடங்க வழிவகை தேடி மக்கள் அலைந்து கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகளை அன்றாடம் உயர்த்தி, மக்கள் தலையில் செலவுச் சுமை ஏற்றி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை உயர்த்தியதன் மூலம் மத்திய அரசு ரூபாய் 40 ஆயிரம் கோடி சுமையை எரிபொருள் நுகர்வோர் தலையில் ஏற்றியது. இதனைத் தொடர்ந்து மாநில அரசு மதிப்புக் கூட்டு வரிகளை உயர்த்தி அதன் பங்குக்கு அடித்து துவைத்தது. இப்போது மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் கடந்த எட்டு நாட்களாக, நாள் தவறாமல் பெட்ரோல், டீசல் விலைகளைத் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மத்திய அரசின் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான தவறான பொருளாதாரக் கொள்கைகளால் அவற்றின் ‘லாப வேட்டைக்கு ‘மக்கள் நலன்கள் பலியிடப்படுகின்றன .

கரோனா நோய் பெருந்தொற்று பரவல் காலத்தில் மக்களுக்கு உணவு தானியம் கொடுத்த வகையில் பெரும் செலவு செய்ததாக பரப்புரை செய்து வரும் மத்திய அரசு, கடந்த மார்ச் மாதம் தொடங்கி இதுவரை ரூபாய் 2.50 லட்சம் கோடியை எரிபொருள் நுகர்வோரின் மடியில் இருந்து சட்டபூர்வமாக எடுத்துக் கொண்டிருக்கிறது.

நாட்டின் குடிமக்கள் மீது அரசு நடத்தும் வழிப்பறிக் கொள்ளையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய அரசின் மக்கள் விரோத செயலை எதிர்த்து ஜூன் 20 நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளது.

இதனடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுகளை ரத்து செய்து, மத்திய, மாநில அரசுகள் வரிகளை பெருமளவு குறைந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 30/-க்கும், டீசல் ரூபாய் 25/- க்கும் விற்பனை செய்யும் வகையில் எரிபொருள் விற்பனை கொள்கையைத் திருத்தியமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு விதிமுறைகளை அனுசரித்து தனிநபர் இடைவெளியைக் கடைபிடித்து முகக்கவசம் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. மக்கள் நலன் காக்கும் இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT