கோப்புப் படம். 
தமிழகம்

ஈரோடு புத்தகத் திருவிழா ரத்து!- மதுரை வாசகர் விழா நடப்பதும் சந்தேகமே

கே.கே.மகேஷ்

ஒரு புத்தகத் திருவிழாவை எப்படி நடத்த வேண்டும் என்று மற்ற மாவட்டங்களுக்கு வழிகாட்டும் அளவுக்குச் சிறப்பாக நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவின்போது நடைபெற வேண்டிய சொற்பொழிவுகளை மட்டும் இணைய வழியாக ஒளிபரப்பு செய்யப்போவதாக மக்கள் சிந்தனைப் பேரவை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசுகையில், “மத்திய - மாநில அரசுகளின் தொற்று நிபுணர்கள், மருத்துவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள், உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் கருத்தின் அடிப்படையில் கரோனா தொற்று இன்னும் பல மாதங்கள் தொடரக்கூடும் என்று தெரிகிறது. கூடவே, சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் இருந்து வர வேண்டிய மிக முக்கியப் புத்தக நிறுவனங்களின் படைப்புகளும் வர முடியாத சூழல் இருக்கிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டும், மிக முக்கியப் பயனாளிகளாகக் கருதக்கூடிய பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு விடப்பட்டுள்ள தொடர் விடுமுறையைக் கணக்கில் எடுத்தும், லட்சக்கணக்கான மக்கள் ஓரிடத்தில் கூடுவது இன்றைய சூழலுக்கு ஏற்றதல்ல என்பதை உணர்ந்தும், ஜூலை 31-ல் இருந்து ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 2020-ம் ஆண்டிற்கான ஈரோடு புத்தகத் திருவிழா ரத்து செய்யப்படுகிறது. 16-வது ஈரோடு புத்தகத் திருவிழா அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பாக நடத்த பேரவை சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புத்தகத் திருவிழாவுக்குப் பதிலாக ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 வரை தினசரி மாலை 6 மணிக்கு இணைய வழியாக சொற்பொழிவு நிகழ்ச்சிகளை மட்டும் நேரலை வழியாக ஒளிபரப்பு செய்ய பேரவை சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது.

மக்கள் சிந்தனைப் பேரவையின் சிறப்பு இணைய வழி மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர விவாதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மதுரை புத்தகத் திருவிழா நடைபெறுமா? என்று ‘பபாசி’யின் மதுரை பொறுப்பாளர்களிடம் கேட்டபோது, "ஈரோடு திருவிழா முடிந்ததும் அதாவது ஆகஸ்ட் மாத இறுதியில் மதுரை புத்தகத் திருவிழா தொடங்குவது வழக்கம். தற்போதைய சூழலில் மதுரையில் தனிக் கடைகள் திறக்கத் தடையில்லை என்றாலும், புத்தகச் சந்தை, அல்லது புத்தகத் திருவிழாவாக நடத்தத் தடை தொடர்கிறது. எனவே, இதுகுறித்து ‘பபாசி’ ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து அடுத்த மாதம் முறைப்படி அறிவிப்போம்" என்றனர்.

SCROLL FOR NEXT