காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையிலிருந்து இன்று மதியம் தண்ணீர் திறக்கப்பட்டது.
காவிரி டெல்டா பாசனத்துக்காக தமிழக முதல்வரால் கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு அந்தத் தண்ணீர் இன்று (ஜூன் 16) நண்பகல் 12 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர், அந்தத் தண்ணீர் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தலா 500 கனஅடி பகிர்ந்து திறந்து விடப்பட்டது.
திறப்பு விழா
கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவிருந்ததால், கல்லணையில் கடந்த சில நாட்களாக 106 மதகுகளும் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. பின்னர் இன்று காலை கல்லணையில் உள்ள ஆஞ்சநேயர், கருப்பண்ண சாமிகளுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தியும், கல்லணையைக் கட்டிய கரிகால்சோழன், சர் ஆர்தர் காட்டன் ஆகியோரது சிலைகளுக்கு மாலையும் அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளின் மதகுகளைத் திறந்து வைத்தும், மலர்களையும், நவதானியங்களைத் தூவியும் விவசாயம் சிறக்க வேண்டிக்கொண்டனர்.
இந்தத் தண்ணீர் திறப்பு விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், புதுச்சேரி மாநில வேளாண்மை துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியர்கள் ம.கோவிந்தராவ் (தஞ்சாவூர்), ஆனந்த் (திருவாரூர்), உமா மகேஸ்வரி (புதுக்கோட்டை), சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.வி.சேகர், ம.கோவிந்தராசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
கல்லணை திறப்பு விழாவில் அமைச்சர்கள் உள்ளிட்டோர்
காரைக்காலுக்குத் தண்ணீர்
கல்லணையில் இன்று திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி பாசனப் பகுதி ஆறுகளில் கடைமடைக்குச் சென்றடைந்த பின்னர் காரைக்கால் பாசனப்பகுதிக்கு உரிய நீர் பங்கீடு செய்து அளிக்கப்படும்.
"மகசூலில் புதிய சாதனை படைப்போம்"
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், "8 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் உரிய நேரத்தில் நடப்பாண்டு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்தி உரிய மகசூலைப் பெற வேண்டும். கடந்த ஆண்டு விவசாயிகள் அதிக மகசூலை, வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகமாகப் பெற்றிருந்தனர். அதன்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வாயிலாக 24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் நடப்பாண்டில் மகசூலில் புதிய சாதனையைப் படைப்பார்கள்.
தற்போது தூர்வாரும் பணிகளும், குடிமராமத்துப் பணிகளும் 90 சதவீதம் முடிந்துள்ளது. இதன் மூலம் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள் பயன்பெற்று நீர் நிலைகளில் தண்ணீ்ர் நிரப்பிக் கொள்ள முடியும்.
மேட்டூர் அணையில் தற்போது விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப கூடுதலாகத் திறக்கப்படும். தகுதியான விவசாயிகளுக்குத் தேவையான பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.